சூமோட்டோ வழக்கு.. பொன்முடி வைத்த கோரிக்கை.. ஓகே சொன்ன ஹைகோர்ட் நீதிபதி
சென்னை: பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி விசாரணையை பிப்ரவரி 19 - 23 தேதிக்கு பதிலாக மார்ச் 12 -15 வரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை மார்ச் 12ஆம் தேதி விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 1996 - 2001 ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இந்த சமயத்தில் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தி 1.36 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. இவ்வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை சூமோட்டாவாக மறு ஆய்வுக்கு எடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டும் என்று பொன்முடி, உச்ச நீதிமன்றத்தை நாடியபோதும், நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் போன்றோர் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி எனக் கூறிய தலைமை நீதிபதி வழக்கை சந்திக்க உத்தரவிட்டார். நீதிபதி ஆனந்த் வெங்கடேசனே சூமோட்டோ வழக்குகளை மீண்டும் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதனையடுத்து, ஐ.பெரியசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. பல்வேறு கேள்விகளை முன்வைத்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு பொன்முடி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். பொன்முடி வழக்கின் இறுதி விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 23 வரை விசாரணை செய்வதற்கு பதிலாக மார்ச் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை மார்ச் 12ஆம் விசாரிக்க ஒப்புதல் அளித்தார். விசாரணைக்கு வரும்போது பொன்முடி தரப்பு வாதங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தற்போதைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டது மற்றும் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். அதேபோல முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
இதனிடையே, இதற்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து, முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார். இதன் தொடர்ச்சியாக, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான இந்த 4 வழக்குகள் பிப்ரவரி 27, 28, 29 மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை பிப்ரவரி 12, 13ஆம் தேதியும், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19 முதல் 22ஆம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, பொன்முடி மீதான வழக்கை பிப்ரவரி 19 முதல் 22-ம் தேதி வரை விசாரிப்பதற்கு பதிலாக, மார்ச் 12 தேதி முதல் 15ம் தேதி வரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணை தேதிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications