திமுகவை.. ஆளுநர் ரவி அப்படி சொன்னதுமே.. படக்குனு பார்த்த எடப்பாடி, ராமதாஸ்.. வேற மாதிரி சொல்றாங்களே?
சென்னை: சென்னையில் மழை பாதிப்புகளை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விடாமல் விமர்சித்து வரும் நிலையில், ஆளுநர் ரவி சொன்ன கருத்துக்கள் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி உள்ள நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது.. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட வடதமிழகத்தில் 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு 2 தினங்களுக்கு முன்பே முடுக்கிவிட்டது.. முதல்வர் ஸ்டாலின் இது சம்பந்தமாக தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரடியாகவே சென்று பார்வையிட்டார்.. மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் மீட்பு பணிகளிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

எதிர்க்கட்சிகள்: எனினும், எதிர்க்கட்சிகள் அரசின் நடவடிக்கைகளில் பெரிதாக திருப்தி அடையவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக செய்யவில்லை என்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக மற்ற அமைச்சர்களை ஓரங்கட்டி வைத்திருப்பதும், அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்..
வெற்று விளம்பரங்கள்: தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் மூலம் புகழும், பெருமையும் சேர்க்கும் வேலையை கைவிட்டுவிட்டு, தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடாமல் அறிக்கைகளை வெளியிட்டு, திமுக அரசை சரமாரி கேள்வி எழுப்பி வருகிறார்.. "சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்?
வீண் விளம்பரங்கள்: அதனால் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
எதிர்க்கட்சிகள் இப்படி விமர்சனங்களை தமிழக அரசு மீது முன்வைத்து வரும்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தந்துள்ள பேட்டி ஒன்று பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
ஆளுநர் ரவி: சேலம் மாவட்டம் மேச்சேரியில் நெசவாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ஆளுநர் சொன்னதாவது:
"மேச்சேரியில் நெசவாளர்களை சந்தித்து பேசியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. நெசவாளர்கள் மீது பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நெசவாளர்கள் மீது பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நெசவாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும். கைத்தறி நெசவாளர்களின் திறமை மிகவும் வியப்பளிக்கிறது.
பாராட்டு: வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. எதிர்பார்த்ததைப் போல அடுத்த 2 நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என நினைக்கிறேன். மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்" என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications