நிலத்தை வைத்திருப்பவர்களுக்கு பட்டா.. இலவச வீட்டுமனை பட்டா வழங்க சூப்பர் சான்ஸ்.. அடடே புள்ளிவிவரம்
சென்னை: தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஏற்கனவே ஒப்புதல் தந்திருந்த நிலையில், வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெறவும் சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீபகாலமாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மீண்டும் கொள்கை விளக்க குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புறம்போக்கு மற்றும் அரசு நிலங்களில் ஏராளமான அடித்தட்டு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பல வருட காலம் வாழ்ந்து வந்தபோதிலும், இன்னும் பட்டா கிடைக்கவில்லை. இவர்களை மையப்படுத்திதான் 86, 000 பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

மாநில அளவிலான உயர்நிலை குழு
இதற்கு பிறகு, சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, மாநில அளவிலான உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காகவே இந்த சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் கூட்டங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் அவ்வப்போது நடந்து வருகிறது.
புறம்போக்கு நிலங்கள்
இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் தவறாமல் கலந்து கொண்டும் வருகிறார்கள்.. அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட வேண்டியுள்ள பொதுமக்களுக்கு விரைவாக பட்டா வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர்கள் போதுமான அளவில் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்.
இதையடுத்து, புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க திட்டமிடப்பட்டு சென்னையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெறுவதற்கு ஏதுவாக, வருவாய் துறையுடன் இணைந்து இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், விற்பனை பத்திரங்கள் உட்பட ஆவணங்களை ஒப்படைத்து, பட்டா பெற்றுக் கொள்ளுமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டும் வருகிறது.
வீட்டுமனை விற்பனை பத்திரம்
இந்த முகாம்களில், மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருவதுடன், ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழுத்தொகையையும் செலுத்தியதுமே, அவர்களுக்கு விற்பனை பத்திரமும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட முகாம்களை நடத்தி முடித்திருந்தது..அதாவது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை சார்பாக, சிறுவர் மாநகராட்சி பூங்கா, மணலி பகுதி-2ல், கடந்த மார்ச் 19,20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டன.. சம்பந்தப்பட்டவர்களும், இந்த முகாம்களில் பங்கேற்று, ஆவணங்களின் நகலினை ஒப்படைத்து பட்டா பெறுவதற்கான விண்ணப்பங்களை தந்திருந்தனர்.
எ1,36,149 பேருக்கு பட்டா
இந்நிலையில், தமிழ்நாடு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மீண்டும் கொள்கை விளக்க குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலுடன், அலுவலர்கள் மேற்கொண்ட பணியால், இதுவரை தமிழ்நாட்டில் 1,36,149 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது" என்ற தகவல் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications