ரூ.1000 கோடி ஊழல்னு களங்கம் பரப்புனீங்களே? திமுகவினர் கேள்வி.. உச்சநீதிமன்றம் கொடுத்த பூஸ்ட்!
சென்னை: டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் திமுகவினருக்கு பூஸ்ட் கொடுத்துள்ளது. அமலாக்கத்துறை, ரூ.1000 கோடி முறைகேடு என தெரிவித்ததால் ஊழல் என பிரச்சாரம் நடந்ததாக சுப்ரீம் கோர்ட்டே குட்டி உள்ளது என திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 41 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் திடீரென அமலாக்கத்துறை உள்ளே நுழைந்து ரெய்டு நடத்தியதோடு, டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ1,000 கோடி முறைகேடு நடைபெற்றுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை தந்தது.

சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, அமலாக்கத்துறையை மிகக் கடுமையாக விமர்சித்தது. அமலாக்கத்துறையானது அரசியல் சாசனத்தையும் உரிய வரம்புகளையும் மீறி செயல்படுகிறது என்று கண்டனம் தெரிவித்ததுடன் நாட்டின் கூட்டாட்சி அமைப்பையே சிதைத்துக் கொண்டிருக்கிறது எனக் கண்டித்துள்ளது.
ஏற்கனவே 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ1,000 கோடி முறைகேடு என அமலாக்கத்துறை அறிவித்ததற்கு முகாந்திரம் என்ன? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தாமல், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு சென்று, அமலாக்கத்துறை சோதனை செய்வது முறையற்றது என்றும் தெரிவித்தது.
மேலும், அரசியல்வாதிகள் போல டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்திருப்பது சட்டத்திற்கு விரோதமானது. அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்பு மீறி அமலக்கத்துறை செயல்படுகிறது என மீண்டும் கண்டனத்தை நீதிபதிகள் பதிவு செய்தனர்.

திமுகவினர் குஷி
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையை கண்டித்துள்ளதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அமலாக்கத்துறை எதிர்க்கட்சிகளை டார்கெட் செய்வதாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கண்டனம் அமலாக்கத்துறைக்கு பெரிய அடியாக விழுந்துள்ளது. அரசியல்வாதிகள் போல டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை கொடுத்ததை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது என திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ குறிப்பிட்டார்.
அதேபோல, டாஸ்மாக் முறைகேடு புகாரில் ரெய்டு நடத்தி ரூ.1000 கோடி முறைகேடு என ED அறிக்கை வெளியிட்டதால் அதை வைத்து எதிர்க்கட்சிகள் ஊழல் என்று பிரச்சாரம் செய்து வந்தன. இதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது என திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

டாஸ்மாக் ரெய்டு விவகாரம்
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபர் ரத்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க உத்தரவிட்டது.
ஒட்டுமொத்த டாஸ்மாக் நிறுவனத்தையும் எப்படி?
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து டாஸ்மாக் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது என்றும் வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டிய உச்ச நீதிமன்றம், முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது விசாரணை நடத்தலாம், ஆனால் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் எப்படி விசாரிக்கலாம் என கேள்வி எழுப்பியது.












Click it and Unblock the Notifications