வடமாநில தொழிலாளர்கள் கணக்கீடு அவசியம்.. பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை.. ஜெயக்குமார் பேட்டி!
வடமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு அவசியம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பு அவசியம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதேபோல் ஒரு மாநிலத்திற்கு எவ்வளவு வெளி மாநில தொழிலாளர்கள் வர வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று கூறிய அவர், யாராக இருந்தாலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளையொட்டி, சென்னை ராயபுரத்தில் கேக் வெட்டியும் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கியும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், தும்பை விட்டு வாலை பிடிக்கக் கூடாது. திமுக ஆட்சியில் அந்த கதை நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அதிகளவில் காய்ச்சல் பரவல் இருக்கிறது.

கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கை
சென்னையில் அனைத்து மருத்துவமனைகளிலும் மக்கள் சிகிச்சையில் இருக்கிறார்கள். கொசுக்கள் மூலம் வைரஸ் உற்பத்தியாகி, அதன் மூலம் வேகமாக பரவக் கூடியது. ஆனால் சென்னை மாநகராட்சி கொசுக்கள் உற்பத்தியை ஆரம்ப கட்டத்தில் அழிக்க தவறியுள்ளது. வரும் முன் காக்காமல், வந்த பின் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறது. இனிமேலாவது இன்ஃபுளுயன்சா காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வதந்திகள் பரப்புவது தவறு
தொடர்ந்து வடமாநில தொழிலாளர் வதந்தி விவகாரம் பற்றிய கேள்விக்கு, யாராக இருந்தாலும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அதேபோல் வதந்திகளை பரப்புவது யாராக இருந்தாலும் தவறுதான். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. பீகாரில் இருந்து குழு வந்துள்ளது என்றால், வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை. வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்திருந்தால் நல்ல விஷயம் தான் என்று தெரிவித்தார்.

கணக்கீடு அவசியம்
அதேபோல் தமிழ்நாட்டில் இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பு அவசியம். ஒரு மாநிலத்திற்குள் எவ்வளவு வெளி மாநில தொழிலாளர்கள் வர வேண்டும் என்று சட்டமில்லை. கணக்கெடுப்பு நடத்திவிட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும் யார் சட்டத்தை கையில் எடுத்தாலும் தவறுதான் என்று தெரிவித்தார்.

ஊழலுக்கு வழிவகுக்கும்
தொடர்ந்து சென்னை மாநகரில் ஆயிரம் தனியார் பேருந்துகளை தனியார் மூலம் இயக்க அரசு திட்டமிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, முதற்கட்டமாக 500 பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இது ஊழல் செய்வதற்கு வழிவகுக்கும். ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்கள்.

எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கியது?
தற்போது போக்குவரத்து துறையை தனியாருக்கு விட்டுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 3.5 லட்சம் வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு அளித்தோம். தற்போதைய திமுக அரசு ஆண்டுக்கு எத்தனை இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கியுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications