சர்வேயர்கள் முதல் விஏஓ வரை.. நிலப் பட்டாவுக்கு லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "லஞ்சமே இல்லாத நேர்மையான ஆட்சியைத் தருவோம்" என்று சொல்லி தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய சக்திகள் தங்களின் முழக்கங்களை தீவிரப்படுத்தி கொண்டிருக்கின்றன. ஆனால் அரசு ஊழியர்களின் லஞ்ச ஆசை மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை.. இதோ நேற்று ஒரே நாளில் எத்தனை அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கைதாகியிருக்கிறார்கள் பாருங்கள்.

ஒரு சாமானிய மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு துண்டு நிலம் வாங்க நேரிடும்போதோ அல்லது, தன்னுடைய குடும்பத்துக்கான ஏதோ ஒரு முக்கியமான சான்றிதழை பெறுவதற்காகவோ அரசு அலுவலகப் படிகளில் ஏறி இறங்க நேரிடுகிறது..

Surveyors

அரசு அதிகாரிகள் கைது

இப்படி அலைந்து திரிந்து வரும் ஏழை மக்களிடம், அங்கு இருக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டுப் பேரம் பேசுவது அவர்களின் வயிற்றில் அடிப்பது போல் இருக்கிறது.

நேற்று ஒரே நாளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்தடுத்து நடந்த 3 லஞ்ச ஒழிப்பு வேட்டைகள், இங்கு எளிய மக்கள் படும் இன்னல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நிலத்தை அளக்க, பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய, வாரிசு சான்றிதழ் வாங்க என எளிய மக்கள் தேடிச் சென்றபோது, அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பேரம் பேசி, இறுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ரசாயனம் தடவிய நோட்டுகளுடன் கையும் களவுமாக சிக்கியுள்ளனர் 4 அரசு அதிகாரிகள்.

சர்வேயர்கள் முதல் விஏஓ வரை

முதலாவது அதிரடி சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. குஜிலியம்பாறை அருகே உள்ள வடுகம்பாடியைச் சேர்ந்த விவசாயி பொன்னர் என்பவர், தன் நிலத்தை அளந்து பட்டா பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். பெண் சர்வேயரான மீனாம்பிகை என்பவரோ, அந்த நிலத்தை அளக்க 15000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அந்தப் பணத்தை கொடுக்க வழியில்லாத பொன்னர், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரை நாடினார். போலீசாரின் ஆலோசனையின்படி, முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை மீனாம்பிகையிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

நிலப் பட்டாவுக்கு லஞ்சம்

இதேபோல நத்தம் போடிக்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி அழகுவேல் என்பவரிடம் பட்டா பெயர் மாற்ற ஆன்லைனில் விண்ணப்பித்ததற்கு 8000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் சர்வேயர் முகமது இப்ராகிம் ஷெரிப். கடைசியில் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை அவர் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். சொந்த மண்ணை அளக்கவே ஏழை விவசாயிகள் லஞ்சம் தர வேண்டிய அவலம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தேனி மாவட்டம் கம்பத்தில் இன்னொரு லஞ்ச நாடகம் அம்பலமானது. சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது உறவினரின் நிலப் பட்டாவில் "லோகமணி" என்பதற்குப் பதிலாக "லோகராணி" என பெயர் தவறாகப் பதிவாகியிருந்தது.

அரசு ஊழியரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சிறு பிழையைத் திருத்தவும், குறைவான பரப்பளவைச் சரிசெய்யவும் கம்பம் கிராம நிர்வாக அதிகாரி கார்த்தியை அணுகியுள்ளார் கனகராஜ். ஆனால், கார்த்தியோ இந்த பெயர் திருத்தத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கறாராக கேட்டாராம்.

தன் தரப்பு நியாயத்தைச் சொல்லியும் அதிகாரி கேட்காததால், லஞ்சம் கொடுக்க மறுத்த கனகராஜ் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பின், திண்டுக்கல் டி.எஸ்.பி நாகராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய 5000 ரூபாய் பணத்தை கனகராஜிடம் கொடுத்து அனுப்பினர். .ஏ.ஓ கார்த்தி அந்த பணத்தைப் பெற்றபோது, மின்னல் வேகத்தில் பாய்ந்த போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்து ஜெயிலில் தடைத்தனர்.

வாரிசு சான்றிதழ் - அரசு ஊழியர்கள்

அடுத்த அதிர்ச்சிச் சம்பவம் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடந்துள்ளது. வில்லியனூர் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் முருகையன் என்பவரிடம், குருமாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வாரிசு சான்றிதழ் கேட்டு முறைப்படி விண்ணப்பித்திருந்தார்.

தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக, அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும், அந்தப் பெண்ணை முருகையன் தொடர்ந்து அலைக்கழித்து வந்துள்ளதாக தெரிகிறது.

சான்றிதழ் வேண்டி அலுவலக வாசலில் தவம் கிடந்த அந்தப் பெண்ணிடம், "வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும்" என முருகையன் நிபந்தனை விதித்துள்ளார்.

லஞ்சப் பணம் - கைது

ஏழைப் பெண்ணின் நிலையைக்கூட யோசிக்காமல் லஞ்சம் கேட்டதால் மனமுடைந்த அவர் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தஞ்சம் புகுந்தார். ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், ரசாயனப் பவுடர் தடவிய 3000 ரூபாயை அப்பெண்ணிடம் கொடுத்து முருகையனிடம் வழங்கச் சொன்னார்கள்.

வில்லியனூர் தாலுகா அலுவலகத்திலேயே வைத்து அந்தப் பணத்தை முருகையன் வாங்கிய அடுத்த நொடியே, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

அரசியல் மேடைகளில் லஞ்ச ஒழிப்பு முழக்கங்கள் தீவிரமாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,ஏழை விவசாயிகளையும் தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் பெண்களையும் அலைக்கழித்து லஞ்சம் வாங்கிய 4 அரசு அதிகாரிகள் ஒரே நாளில் கைதாகியிருப்பது, சாமானிய மக்களின் சிஸ்டம் இன்னும் எவ்வளவு மாறாமல் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது... இதெல்லாம் நிஜமாகவே எப்போது மாறும்????

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+