“எங்களை முதலாளி ஆக்கியவர் முதல்வர்” - ஸ்டாலினைப் பாராட்டும் பெண்கள்
சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் தமிழ்நாடு அரசு, அவர்கள் தொழில் தொடங்க கடன் உதவி அளித்து வருகிறது.
இத்திட்டத்தால் இந்த 2023- 24 நிதியாண்டில் மட்டும் இதுவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 52.5% பேர் பலனடைந்துள்ளனர். மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் ஏறக்குறைய 24.5% பேர் பலன்பெற்றுள்ளனர். பட்டியலின மக்கள் சுமார் 19.7% பேர் இத்திட்டத்தால் புதிய தொழில்முனைவோராக மாறியுள்ளனர் என்கிறது அரசின் புள்ளிவிவரம்.

இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். அதனால் பலனடைந்த நேரடி சாட்சிகள் என்ன சொல்கிறார்கள்? அப்படி ஒரு நேரடி பயனாளிகளில் ஒருவர்தான் திருவள்ளூரைச் சேர்ந்த வேதஸ்வருபி.

ஒரு காலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த இந்த இவர், இன்று முதலாளியாக முன்னேறி இருக்கிறார். அதற்குக் காரணம், முதலமைச்சர் ஸ்டாலின். அவர் பெற்ற பயன் என்ன? பேசினார் வேதஸ்வருபி.

"நான் டி ஃபார்ம் முடித்திருக்கிறேன். ஒரு தனியார் நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்துவந்தேன். கொரோனா தொற்றுக்குப் பிறகு எங்கள் பகுதியில் போதுமான மருந்தகங்கள் இல்லாமல் தட்டுப்பாடு நிலவியது. அந்தநேரத்தில் நானும் வேலைக்குப் போகமுடியாமல் வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. காரணம், ஊரடங்கு. அப்போதுதான் நாமே ஒரு மருந்தகம் தொடங்கினால் என்ன என்ற யோசனை வந்தது.

அந்தநேரத்தில் என் உறவினர் ஒருவர் தமிழ்நாடு அரசு எம்.எஸ்.எம்.இ மூலம் சிறு தொழில்கள் தொடங்க கடன் உதவி அளித்துவருவது தொடர்பான விவரங்களைச் சொன்னார். சரி, நாமே கடன்பெற்று ஒரு மருத்து கடை தொடங்கினால் என்ன? நாமும் ஒரு தொழில்முனைவோராக மாறலாமே? என்று திட்டமிட்டேன்.

அதன்படி தமிழ்நாடு அரசின் மாவட்ட தொழில் மைய அலுவலகம் போய் விசாரித்தேன். என்னைப் போன்றவர்கள் தொழில் தொடங்க 'UYEGP' (Unemployed Youth Employment Generation Programme) என்ற திட்டம் இருப்பதை அதிகாரிகள் விளக்கிச் சொன்னார்கள். அதாவது வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திட்டம் இது. இதன் கீழ்தான் நான் கடன்பெற்றேன்.

இந்த மையமானது படித்தவர்களுக்கு மட்டுமன்றி ஏதேனும் ஒரு தொழிலில் நல்ல அனுபவம் உள்ளவர்களுக்கும் அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க கடன் உதவி செய்கிறது. ஆகவே, யாரும் இந்த மையத்தை அணுகி, அவர்களின் வசதிக்கு ஏற்ப தேவையான கடனுதவியைப் பெற முடியும் என்பதையும் இங்கே சேர்த்துச் சொல்ல விரும்புகிறேன்.

இந்தக் கடனைப் பெறுவதற்கு நான் டி ஃபார்ம் முடித்ததற்கான சான்றிதழ் கேட்டார்கள். அதன் பிறகு கடை வைப்பதற்கான உரிமம் வாங்க வேண்டும் என்றார்கள். அதையும் வாங்கினேன். அதன் பிறகு கடனுதவி பெறுவதற்கான நடைமுறைகள் மிக எளிதாக இருந்தன. அங்குள்ள அதிகாரிகளே எங்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார்கள். எந்தத் தாமதமும் இல்லை.

தேவையான ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்த பிறகு, நேர்காணலுக்கு அழைத்தார்கள். அதிகாரிகளுடன் கலந்துரையாடல் முடிந்ததும், அவர்கள் வங்கி அதிகாரிகளைப் பார்க்கச் சொன்னார்கள். அங்கும் எங்களது ஆவணங்களைச் சரி பார்த்த பிறகு, கடனுதவி செய்தார்கள்.

தமிழ்நாடு அரசு வழங்கிய இந்தக் கடன் உதவி மூலம் இன்றைக்கு நான் ஒரு தொழில்முனைவோராக மாறி இருக்கிறேன். எனக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைத்திருக்கிறது. நாமும் ஒரு தொழிலைத் தொடங்கி, சிலருக்கு வேலை வாய்ப்பை உருவாகித் தரமுடியும் என்ற தைரியம் பிறந்திருக்கிறது. அதற்காக எனது மனப்பூர்வமான நன்றியை முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பல ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் மூலம் கடன் உதவி செய்திருக்கலாம்.

ஆனால், என் வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் நான் ஒரு உழைப்பாளியாகத்தான் இருந்திருப்பேன். என்னை முதலாளி ஆக்கியவர் முதல்வர்தான். என் ஆயுள் உள்ளவரை அவரது உதவியை நான் மறக்கவே முடியாது" என்கிறார்

இந்த அரசினால் பலனடைந்த தனிநபர் வேதஸ்வருபி. இவரைப் போலத் தஞ்சாவூரைச் சேர்ந்த பெரிய பெண்கள் படையே இந்த அரசின் திட்டத்தால், பலனடைந்துள்ளது. கைத்தொழில் மூலம் கைவினைப் பொருட்களைக் கடை போட்டுச் சம்பாதிக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

அது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மிகத் தெளிவான விவரங்களைத் தருகிறார் படியுங்கள்.

"தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு மகளிர் குழுக்கள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. அவை யாவும் முறையாக ஒருங்கிணைக்கப்படாமல் இருந்துவந்தன. ஆகவே சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களைச் சந்தைப் படுத்துவது மிகப் பெரிய சவாலாக இருந்தது.
அதோடு விற்பனைக்காக மூன்றாவது நபரைச் சார்ந்து செயல்படவேண்டிய சூழ்நிலை நிலவியது. அப்படி விற்பதன் மூலம் இடைத்தரகர்கள் அதிக இலாபத்தைப் பெற்று வந்தனர். உழைக்கும் மகளிர் குழுவுக்குக் குறைந்த அளவிலான லாபமே கிடைத்துவந்தது. இதை மாற்ற வேண்டும் என விரும்பினோம்.
இதற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் 'தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுயஉதவிக்குழு விற்பனை அங்காடி' என்ற மையத்தை உருவாகினோம். அங்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனைக்கு வைத்தோம்.
அத்துடன் அந்த மையத்தின் நிர்வாகம் முழுவதையும் மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைத்தோம். மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பும் அதேவேளையில் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு நியாயமான லாபமும் கிடைத்துவருகிறது" என்கிறார் மாவட்ட ஆட்சியர்.
இந்தத் தாரகை அங்காடியில் பணிபுரிந்துவரும் மணிமேகலை சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவர், "நான் ஆலக்குடி ஊராட்சி தலைமையிலான குழுக் கூட்டமைப்பில் உள்ள 'சாரதாஸ் மகளிர் சுய உதவிக்குழு'வில் செயல்பட்டு வருகிறேன். அதன் சார்பாகத்தான் 'தாரகை' கடையை எடுத்து நடத்திவருகிறோம். கடந்த மார்ச் மாதம் முதல் இந்தக் கடையில் பல சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை வைத்து விற்பனை செய்துவருகிறோம்.
முன்பு எல்லாம் சுய உதவிக்குழுக்கள் பல பொருட்களைத் தயாரிப்பார்கள். அதை எங்கே கொடுத்து விற்பது என்பதில் பல தடைகள் இருந்தன. ஆனால், இப்போது தடைகள் இல்லாமல், நாங்களே நேரடியாக விற்பனையைச் செய்கிறோம். கடைக்கு வாடிக்கையாளர்களும் அதிக அளவில் தேடி வருகிறார்கள். மாவட்டத்தின் மையப்பகுதியிலேயே கடை இருப்பதால், பொது மக்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக 22 மகளிர் குழுக்களின் தயாரிப்புகளை நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். கற்றாழை சோப்பு, வயர் கூடைகள், கம்ப்யூட்டர் சாம்பிராணி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், மர சாமான்கள் என வீட்டுக்குத் தேவையான பல பொருட்களை விற்று வருகிறோம்" என்கிறார்
தேவிகா, "ஒவ்வொரு மாதமும் ஒரு குழு இங்கே விற்பனைக் கடையை நிர்வாகம் செய்யும். மொத்தம் 22 குழுக்கள் உள்ளன. இங்கே வேலை செய்வதற்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பளமாகக் கிடைக்கிறது. தஞ்சாவூர் போன்ற பகுதியில் ஒருநாளைக்கு இது நல்ல சம்பளம். இதைவைத்து குழந்தைகளின் படிப்பு செலவு, குடும்ப செலவு என அனைத்தையும் சமாளிக்க முடிகிறது.
அதாவது கணவரின் வருமானத்தை நம்பி இல்லாமல், சுய உதவிக்குழு மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து நாங்கள் சொந்தக் காலில் நடைபோடுகிறோம். அதற்கு இந்தக் கடையும் குழுவும் பெரிய உதவியாக உள்ளது.
முன்பு தனியார் நிறுவனத்தில்தான் பணியாற்றி வந்தேன். அங்கே கூலித் தொழிலாளியாகவே இருப்பதைப்போன்று ஒரு மனநிலை இருக்கும். ஆனால், இன்றைக்கு ஒரு பொருளை நாங்களே தயாரிக்கிறோம். அதனை நாங்களே விற்பனையும் செய்கிறோம். நம் கையில் ஒரு தொழில் உள்ளது. அது நம்மைக் காப்பாற்றும் என்ற மனநிறைவு கிடைக்கிறது. எங்கள் வீட்டில்கூட யாரும் எங்களுக்கு உதவவில்லை. முதல்வர்தான் எங்களை முதலாளி ஆக்கி இருக்கிறார்" என்கிறார் இந்தப் பெண்மணி.
பெண்களின் முன்னேற்றம் என்பது பொருளாதார முன்னேற்ற மட்டும் இல்லை. அது ஒரு சமூகநீதி. அதைத்தான் ஸ்டாலினும் அடிக்கடி ஒவ்வொரு மேடையிலும் நினைவுபடுத்திக் கொண்டே வருகிறார்.












Click it and Unblock the Notifications