ஸ்விக்கி, ஓலா நிறுவனங்கள் ஓடிபி கேட்க தடை கோரி வழக்கு.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை போட்ட உத்தரவு
சென்னை: உணவி டெலிவரி நிறுவனங்கள், அரசு சேவைகளை பெறுவதற்கு தற்போது ஓடிபி அவசியமாக உள்ள நிலையில், இதனால் சில சமயங்களில் பணம் இழக்கும் அபாயம் இருப்பதாகவும், எனவே உணவு டெலிவரி நிறுவனங்கள் ஓடிபி கேட்க தடை விதிக்க வேண்டும் என பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

ஓடிபி கேட்க தடை கோரி வழக்கு
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பணப் பரிமாற்றங்களுக்கு செல்போனில் ஓடிபி எண்கள் பெறப்படுகிறது. இது போக தமிழ்நாடு காவல்துறையின் குடியுரிமை பிரிவு, இ-சேவைகள், நில ஆவணங்கள் பிரிவு, ஓலா, ஊபர், உணவு டெலிவரி நிறுவன செயலிகளான சொமேட்டோ, ஸ்விக்கி போன்றவற்றிலும் ஓடிபி நடைமுறைகள் அமலில் இருக்கின்றன.
இவற்றிற்கும் ஓடிபி பெறப்படும் போது, பொதுமக்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியது உள்ளது. ஓடிபியின் காரணமாக சாதாரண மக்களிடம் சிலர் ஓடிபி எண்களை பெற்று பணத்தை பறிகொடுத்துவிடுகின்றனர். ஒரு சாப்பாடு ஆர்டர் செய்தாம் என்றால் ஓடிபி சொல்லுகின்றோம். ஆனால் படிக்க தெரியாத சிலர் ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அந்த எண்களை கூறிவிடுகின்றனர்.
உயர் நீதிமன்றம் உத்தரவு
இதனால் ஒரு சில சமயம் அப்பாவி மக்கள் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது. பல்வேறு மோசடிகளிலும் சிக்கிக்கொள்கின்றனர். எனவே அரசு மற்றும் தனியார் சேவைகளை பெறுகின்றபோது, ஓடிபி எண்களை வழங்கி சேவைகளை உறுதி செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் ஆகியோர், "இப்போதைய நவீன காலகட்டத்தில் ஓடிபி எண்களை வழங்காமல் இணையதள சேவைகளை பெறுவது இயலாத காரியம் ஆகும். ஓடிபி பெறுவது சம்பந்தமாக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கொள்கை ரீதியான ஒப்பந்தத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் எங்காவது நடந்த முறைகேடுகளை மனுதாரர் குறிப்பிட்டு அது சம்பந்தமாக நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யலாம். ஆனால் இந்த வழக்கை விளம்பர நோக்கத்துக்காக மனுதாரர் தாக்கல் செய்ததாகவே இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே இந்த மனுவானது தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications