தாம்பரம் பகுதியில் அதிக உயர வேகத்தடை.. மகன்கள் கண் முன்னே தந்தை மரணம்.. யார் காரணம் தெரியுமா?
சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவர், அதிக உயர வேகத்தடையால் நிலை தடுமாறி, மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன்கள் கண் எதிரேயே கூலி தொழிலாளி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் எம்.ஜி.ஆர். நகர் சாரங்கபாணி தெருவில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவருககு 36 வயது ஆகிறது. கோவிந்தராஜின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் ஆகும். கோவிந்தராஜ் தனது மனைவி சந்தோசம், மகன்கள் கருப்புசாமி(14), சூரிய பிரகாஷ்(9) ஆகியோருடன் சிட்லபாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வந்தார்.

கூலித்தொழிலாளி கோவிந்தராஜ், தனது மகன்கள் கருப்புசாமி, சூரிய பிரகாஷ் ஆகியோருடன் தனது பைக்கில் சிட்லபாக்கம் சர்வமங்களா நகர் 2-வது தெருவில் சென்று கொண்டிருந்தார். அந்த தெருவில் திடீரென புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் வேகத்தடை மிகப்பெரிய உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் யாரும் வேகமாக சென்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் திடீரென வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வேகத்தடை குறித்து எதுவும் தெரியாததால், வேகமாக வந்த அவர், திடீரென போடப்பட்ட மிகப்பெரிய வேகத்தடையை கண்டு பதற்றத்துடன், பிரேக் போட்டு ஏற முயன்றார். ஆனால் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.
வேகத்தடையால் மரணம்: இதில் அவரது மகன்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஆனால் மின்கம்பத்தில் மோதியதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ், மகன்கள் கண் எதிரேயே அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது நெஞ்சை பதற வைக்கும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விபத்தில் பலியான கோவிந்தராஜ் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகன்கள் கதறி அழுதனர். சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் விரைந்து வந்ததுடன், கோவிந்தராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சிட்லபாக்கம்: தாம்பரம் மாநகராட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சிட்லபாக்கம் பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டதாகவும்.. ஆனால் அளவுக்கு அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டதுடன், வேகத்தடை இருப்பதற்கான எந்த எச்சரிக்கைகளும் அமைக்கப்படாததால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.
வேகத்தடை விபத்துக்கள்: ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் நிலைதடுமாறி விழுந்த ஒருவர் தற்போதும் உயிருக்க ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அளவுக்கு அதிமான உயரத்தில் அமைக்கப்பட்ட வேகத்தடையால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேகத்தடை அகற்றம்: இதனிடையே விபத்து நடந்த வீடியோ வேகமாக பரவ தொடங்கிய நிலையில், அவசர அவசரமாக அந்த பகுதியில் புதிதாக போடப்பட்டிருந்த வேக தடைகளை ஜேசிபி எந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அதிக உயரத்தில் அமைக்கப்பட்ட வேகத்தடையால் கூலி தொழிலாளி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி: இதனிடையே சாலை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்போர் சங்கத்தினர் ஒப்பந்ததாரர் மூலம் அந்த பகுதியில் அவசர அவசரமாக வேகத்தடையை உருவாக்கியிருக்கிறார்கள் . தற்போது அகற்றப்பட்டுள்ளது. இது பற்றி விசாரித்து வருகிறோம் என தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேகத்தடை அமைப்பது ஏன்: தங்கள் பகுதியில் சாலையில் யாரும் வேகமாக போகக்கூடாது என்பதற்காக வேகத்தடை அமைக்க விரும்பும் குடியிருப்புவாசிகள், அந்த வேகத்தடையை முறையாக மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, வாகன ஓட்டிகளை பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும். அப்படி இல்லாமல் இஸ்டத்திற்கு அமைத்தால் இதுபோன்று அநியயாமாக வாகன ஓட்டிகள் உயிரிழப்பது தொடரவே செய்யும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications