தாம்பரத்தில் அமைகிறது புதிய பேருந்து முனையம்.. மாநகராட்சி எடுத்த சூப்பர் முடிவு
சென்னை: தென் சென்னையில் வசிக்கும் பல லட்சம் மக்கள் வந்திறங்கும் ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் இருக்கிறது என்றால்.. அது தாம்பரத்தில் தான்.. ஆனால் தாம்பரம் பேருந்து முனையம் என்பது மிகவும் நெரிசலான இடத்தில் இருக்கிறது. நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களால் வாகனங்கள் செல்ல முடியாத நிலைஇருக்கிறது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தேசிய நெடுஞ்சாலை அருகே 6.5 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து முனையம் கட்ட தாம்பரம் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் ஒரு காலத்தில் எழும்பூர் ரயில் நிலையம்தான் மையப்பகுதியாக இருந்தது. எப்போது ஓஎம்ஆர் சாலையில் ஐடி நிறுவனங்கள்அனைத்தும் குவியத் தொடங்கியதோ, விமான நிலையம் முதல் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை எப்போது போடப்பட்டதோ, அப்போது முதல் ஏற்பட்ட தென்சென்னையின் வளர்ச்சி என்பது, தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் ஏற்படாத அசுர வளர்ச்சியாகும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்கார தொகுதியாகவும், தமிழ்நாட்டின் அதிக மக்கள் தொகை உள்ள தொகுதியாகவும் சோழிங்கநல்லூர் உருமாறி உள்ளது. இதேபோல் பக்கத்தில் உள்ள வேளச்சேரியும் வேறுமாதிரி வளர்ந்துவிட்டது. இவ்வளவு முக்கியத்தும் வாய்ந்த பகுதிகளில் உள்ள திருவான்மியூர் தொடங்கி மகாபலிபுரம் வரை உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் ரயில் ஏறுவதற்கு தாம்பரம் தான் வருகிறார்கள். தாம்பரத்தில் இருந்தே வெளியூர்களுக்கு செல்கிறார்கள். இதனால் தாம்பரமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. குறிப்பாக கிளாம்பாக்கம் வந்த பின்னர், மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது.
தாம்பரத்தில் தான் பலர் ரயிலில் ஏறியும் இறங்கியும் வருகிறார்கள். சென்னையின் நுழைவு வாயிலாக இருந்த தாம்பரம் இப்போது சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டது. இதன் காரணமாக தாம்பரம் பேருந்து நிலையம் எப்போதுமே நெரிசல் மிகுந்த இடமாக இருக்கிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் தாம்பரத்தில் நின்று செல்வதால். பயணிகள் தங்கள் மற்ற இடங்களுக்கு செல்ல, இங்கிருந்தே பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் தாம்பரம் பஸ் ஸ்டாண்டை பொறுத்தவரை பயணிகள் கூட்டத்தை நிர்வகிக்கும் அளவிற்கு பெரியது கிடையாது. பல்லாவரம், குரோம்பேட்டையில் உள்ளது போல் சாதாரணமாக பேருந்துகள் சில நிமிடம் நின்று செல்லும் வகையிலேயே மிகவும் சிறியதாக உள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது. இது ஒருபுறம் எனில், சாலையோர வியாபாரிகளால் பேருந்து நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருக்கிறது.இதன் காரணமாக ஓட்டுநர்கள் பேருந்துகளை நெடுஞ்சாலையில் நிறுத்தி வைத்து, ஏற்றி இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
தாம்பரம் சானிட்டோரியத்தில் உள்ள பேருந்து நிலையம் என்பது காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட சென்னை, விழுப்புரம் கோட்ட பேருந்துகள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக தாம்பரம் ரயில் நிலையம் அருகே பேருந்து நிலையம் என்பது சிறிய அளவில் உள்ளதால், தாம்பரம் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 198 மீட்டர் நீளமுள்ள ஒரு புதிய முனையத்தை கட்ட முடிவு செய்திருக்கிறது.
இந்த புதிய பேருந்து முனையம் கட்டுவதற்கு வரும் மார்ச் 7ஆம் தேதி டெண்டர் விட தாம்பரம் மாநகராட்சி முடிவு செய்துள்ளது, மேலும் பணியை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், தாம்பரம் மாநகர பேருந்து முனையம் கட்டப்பட உள்ள இடத்தைப் பார்வையிட்டு, மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.












Click it and Unblock the Notifications