தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் 10 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தம்.. மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் பொதுவாக வாகன நிறுத்தம் என்று எங்குமே இல்லை. தாம்பம் ரயில் நிலையத்தை விட்டால், பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருசக்கர வாகன பார்க்கிங் உள்ளது. ஆனால் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் கிடையாது.. இதனால் கண்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதனை குறைக்கும் வகையில் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் ரூ.10 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்று தாம்பரம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடந்தது. தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் ஆனது. நிதி குழு தலைவர் ரமணி ஆதிமூலம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் விவரம்:
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4 கோடியில் 5 மண்டலங்களிலும் பசுமை புல் வெளி விளையாட்டு திடல்கள் அமைக்கப்படும்.
தாம்பரம் மாநகராட்சியில் மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் இளைஞர்களுக்கான போட்டித் தேர்வுகள், உயர் கல்வி பயில்வதற்காக ரூ.3 கோடியில் அதிநவீன படிப்பகம் உருவாக்க உள்ளோம்.
தாம்பரம் மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ரூ.11 கோடியில் நவீன உணவகம் கட்டப்படும்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பிரதான சாலைகளில் ரூ.3 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும்.
தாம்பரம் பகுதியில் ரூ.10 கோடியில் ஏரிகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் ரூ.10 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.
தாம்பரம் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பகுதிகளில் ரூ.27 கோடியே 60 லட்சத்தில் குடிநீர் ஆதாரம் புனரமைக்கப்படும்.

தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளில் ரூ.1 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
*மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியாக உள்ளதால் ரூ.10 கோடியில் ஸ்மார்ட் சாலையாக மாற்றப்படும்.
பொதுமக்கள் எளிதில் தங்கள் வரியை செலுத்த ஏதுவாக நடமாடும் வரி வசூல் வாகனம் ரூ.25 லட்சத்தில் வாங்கப்படும்.

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் நவீன முறையில் தாம்பரம் மாநகராட்சிக்கு என புதிய வலைத்தளம் ரூ.20 லட்சத்தில் உருவாக்கப்படும்.
குழந்தைகள் சாலை விதிகள் மற்றும் சாலை ஒழுங்கு முறைகளை கற்றுக்கொள்ளும் நோக்கில் ரூ.1 கோடியில் டிராபிக் பார்க் அமைக்கப்படும். ஒட்டுமொத்தமாக 71 புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications