இதுதான் தாம்பரத்தின் பவர்.. மேஜிக் செய்த மக்கள்.. சென்னையின் இதயம் இனி இதுதான்!
சென்னை: சென்னையின் இதயப்பகுதி எது என்று கேட்டால் கண்டிப்பாக அண்ணாசாலையை சொல்லலாம். ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பின்னர் தாம்பரம் தான் சென்னையின் இதயப்பகுதியாக இருக்க போகிறது.இது ஒருபுறம் எனில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நிற்காமல் சென்றவரை காலியாகவே சென்றது. ஆனால் தாம்பரத்தில் நின்று சென்ற பின்னர் ஹவுஸ்புல்லாக செல்கிறது.
சென்னையில் 2000களில் தாம்பரம் நகரம் , இப்போது செங்கல்பட்டு உள்ளது போல் புறநகர் பகுதியாக இருந்தது. சென்னை என்பது அங்கிருந்து குறைந்தது 15 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்றால் தான் அடைய முடியும். அதாவது கிண்டி தான் சென்னை என்பதாக இருந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல.. சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக தாம்பரம் மாறிவிட்டது.

தாம்பரத்தில் இருந்து சென்னையின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் போக முடியும். பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஒரே இடத்தில் இருக்கிறது. இதுவே தாம்பரத்தின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. சென்னைக்குள் இருப்பதை விட தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருப்பது எதிர்காலத்தில் பெரிய நன்மையாக இருக்கும் என்று நினைத்த தென்மாவட்ட மக்கள், பலரும் தாம்பரத்தை சுற்றியே இடம் வாங்கினார்கள். இன்று தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளில் தென்மாவட்டத்தினர் அதிகஅளவு வசிக்கிறார்கள்.
சென்னையின் புறநகராக இருந்து முக்கிய பகுதியாக வளர்ந்துவிட்ட தாம்பரம் இன்னும் ஒரு வருடத்தில் சென்னை இதயப்பகுதியாகவே மாறப்போகிறது. காரணம், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையம் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அடுத்து அமைகிறது. இப்போது உள்ள சூழலில் மக்கள் தாம்பரம் வரியாக ரயிலில் வந்து அதன்பிறகு கிளாம்பாக்கத்திற்கு எளிதாக செல்ல முடியும். பேருந்து பயணம் அனைத்துமே தாம்பரத்தை கடந்து தான் கிளாம்பாக்கம் செல்ல முடியும். கிளாம்பாக்கத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி தாம்பரத்தில் இருந்தே அதிகம் இருக்கும் என்பதால் மக்கள் பலரும் கிளாம்பாக்கத்தை முக்கியமான போக்குவரத்து தளமாக பயன்படுத்துவார்கள்,.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வேளச்சேரி சாலை என மொத்தமாக சந்திப்பதால் ஒட்டுமொத்த சென்னை மக்களும் கிளாம்பாக்கத்தை நோக்கி வர தாம்பரத்தை கடந்து தான் வருவார்கள். எனவே தாம்பரத்தில் வருங்காலத்தில் மிக உச்சகட்ட அளவில் மக்கள் நெருக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது ஒருபுறம் எனில் தாம்பரம் ரயில் நிலையத்தில் எல்லா ரயில்களும் நின்று செல்லும். மதுரை செல்லும் தேஜஸ் ரயில் மட்டும் நின்று செல்லாமல் சென்று வந்தது. இந்த ரயில் சென்னை மதுரை இடையிலான 493 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 6 மணி நேரத்தில் கடக்கிறது. இதனால், பொதுமக்கள் பலரும் இந்த விரைவு ரயிலை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த தேஜஸ் விரைவு ரயில், தாம்பரத்தில் நிற்காமல் சென்று வந்தது. இதனால், இந்த விரைவு ரயிலில் போதிய பயணிகள் ஏறாமல் இருக்கைகள் பல நாட்கள் காலியாகவே சென்றுவந்தது.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 26ம் தேதி முதல் தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி சென்று வந்தது. அதாவது தற்காலிகமாக 6 மாத காலம் பிப்ரவரி 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் அறிவித்திருந்தார்கள்.
இதையடுத்து, தாம்பரத்தில் இருந்து தேஜஸ் விரைவு ரயிலை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. முன்பு எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும்போது, 25 முதல் 40 சதவீத இருக்கைகள் காலியாகவே இருக்கும. தாம்பரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல துவங்கியதிலிருந்து இருக்கைகள் முழுவதும் நிரம்பி வழிந்து வருகின்றன. தாம்பரம் மக்கள் தான் இந்த தேஜஸ் ரயிலில் அதிகம் பயணிக்கிறார்கள். பயணிகள் அதிக அளவு ஏறி செல்வதால், தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் இனி மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications