விழுப்புரத்தோடு ஸ்டாப்.. தாம்பரம் சூப்பர் பாஸ்ட் ரயில் பற்றி வெளியான அப்டேட்.. பயணிகளே நோட் பண்ணுங்க
சென்னை: செங்கோட்டை - தாம்பரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒரு மாத காலம் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வராது எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் தாம்பரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் திங்கள் கிழமை, புதன் கிழமை வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து சென்னை தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, திருநெல்வேலி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி,
அறந்தாங்க்கி, பட்டுக்கோட்டை, முத்துபேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக வந்து மறுநாள் அதிகாலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். தென் மாவட்டத்தில் இருந்து வரும் பயணிகளுக்கும் காரைக்குடி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயணிகளுக்கும் இந்த ரயில் பெரும் வசதியாக இருந்தது.
அதேபோல மறுமார்கத்தில் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் இந்த ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. சென்னை தாம்பரத்தில் இருந்து 9 மணிக்க்கு புறப்படும் இந்த ரயில் மறு நாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். இந்த நிலையில் தான் வருகிற 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 11 ஆம் தேதி வரை விழுப்புரம் வரை மட்டுமே தாம்பரம் அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 'இன்டர்லாக் சிக்னல்' பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை வழியாக இயக்கப்படும் (வண்டி எண் 20683 / 20684) தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும்" என்று கூறப்பட்டுள்ளது. விழுப்புரம் மட்டுமே இயங்கும் என்பதால் அதற்கேற்றவாறு மட்டுமே பயணிகள் முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications