தமிழ்த்தாய் வாழ்த்தை.. மாநில பாடலாக அறிவித்ததற்கு தமிழ்த் தேசிய பேரியக்கம் எதிர்ப்பு.. என்ன காரணம்?
சென்னை: தேன் மொழியாம் நமது இனிய தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய 'நீராருங் கடலுடுத்த' எனும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருவது வழக்கமாகும். ஆனால் சமீப காலமாக தமிழ்த்தாய் வாழ்த்து சரிவர படப்படுவதில்லை என்று அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது.

எழுந்து நிற்பது கட்டாயம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநில பாடலாக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழ்த் தேசிய பேரியக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய பேரியக்கம் எதிர்ப்பு
தஞ்சாவூரில் நடந்த தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீராருங் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தமிழ்த் தாய்க்கு மட்டும் வணக்கம் செலுத்தி எழுதப்படவில்லை. தமிழ்த்தாயுடன் பாரதத்தாய், திராவிடத்தாய் என மூவருக்கு வணக்கம் செலுத்தி எழுதப்பட்டுள்ள நிலையில், அதை மாநில பாடலாக தமிழக அரசு அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல.
Recommended Video

'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே'
அதற்குப் பதிலாக, தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் வகையில், புதுச்சேரி அரசு அறிவித்துள்ள பாவேந்தர் பாரதிதாசனின் பாடலான 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' பாடலை மாநில பாடலாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு தமிழ்த் தேசிய பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications