முட்களுக்கிடையே ஒரு மலராய்.. நெஞ்சங்களை கிள்ளி.. அழியாத கோலம் போட்டு சென்ற மகேந்திரன்!
மறக்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்.
Recommended Video

சென்னை: முள்களுக்கிடையே மலராய் மலர்ந்து.. நம் நெஞ்சங்களை கிள்ளி.. அழியாத கோலங்களை இட்டு சென்றவர் டைரக்டர் மகேந்திரன்!
டைரக்டர் மகேந்திரனை தவிர்த்துவிட்டு தமிழ் திரையின் தரமான இயக்குனர் பட்டியலை தயாரிக்க முடியாது. அழுத்தமான கதையம்சமும், நேர்த்தியான படைப்புத் திறனும் எளிமையாக புரிய வைக்கும் ஆற்றலும் நிறைந்தவர் மகேந்திரன்.
இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை காலப்பூர்வமாக மட்டுமின்றி வர்த்தக ரீதியாகவும் பெற்றி பெற்றவை. எம்ஜிஆரின் உதவியால் டைரக்டர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்த மகேந்திரன் சிறிது காலம் பத்திரிகையாளராகவும் இருந்தவர்.

காமிரா
இவரை முழுமையான ஒரு இயக்குனராக அறிமுகம் செய்த படம் முள்ளும் மலரும். இதன் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. புதிய கோணத்தில் ரஜினி, ஷோபாவின் நடிப்பு, இனிமையான ராஜாவின் இசை, பாலுமகேந்திராவின் காமிரா.. போன்றவை முன்னணி கதாபாத்திரமாய் நடித்தது.

மெட்டி
இதையடுத்து உதிரிப்பூக்கள், ஜானி, பூட்டாத பூட்டுக்கள், நண்டு, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி போன்றவை முக்கியமானவை. ஆர்ப்பாட்டமோ, அமர்க்களமோ இல்லாமல் தெளிந்த நீரோடை போல எளிமையான காட்சிகளாய் மனதில் சம்மணம் போட்டு உட்காரும் அமைதியான ட்ரீட்மென்ட் மகேந்திரனின் தனி சிறப்பு ஆகும்.

உறுத்தும் காட்சிகள்
திரைப்படம் என்பது பிரதானமான கண்காட்சி சாதனமாகும். அங்கு காதுகளைக் காட்டிலும் கண்களுக்குத்தான் வேலை அதிகம் என்பதை துல்லியமாக புரிந்து கொண்டவர் மகேந்திரன். இவரது படத்தின் மொத்த வசனங்களையும் எட்டாக மடித்து சட்டைப் பையில் வைத்து கொள்ளலாம். ஆனாலும் உள்மனது பாரமாக இருக்கும். அதன் உணர்வுகள் சில காட்சிகளால் உறுத்தும்!

கதாநாயகிகள்
நகைச்சுவை என்ற பெயரில் அருவருப்பான காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இவரது படத்தில் இடம்பெற்றதில்லை என்பது கவனத்திற்குரிய விஷயமாகும். இவரது கதாநாயகிகள் ஷோபா, அஸ்வினி, சுகாசினி போன்றோர் கண்ணியம் மிகுந்தே - அதே நேரத்தில் நடைமுறை சமுதாயத்தின் பிரிக்க முடியாத நிஜங்களின் நகல்களாக ஒளிர்ந்தார்கள். இதன் மூலம் பெண்களுக்கு மகேந்திரன் அளித்த மதிப்பும் மரியாதையும் மகத்தானது. மற்ற ஆண்களுக்கும் எடுத்துக்காட்டானது.

பூட்டாத பூட்டுக்கள்
உதாரணத்திற்கு, மகேந்திரனின் புதுமையான படம் என்பதை புரட்சிகரமான படம் என்று சொன்னால் அது பூட்டாத பூட்டுக்கள்தான். இந்த சமுதாயத்தில் எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் அது ரகசியமாக செய்யப்படுமானால் அது நியாயமாகி விடுகிறது. ஆனால் சின்னஞ்சிறு தவறாக இருந்தாலும் அது பகிரங்கமாக இழைக்கப்படுமானால் அது மன்னிக்க முடியாத குற்றமாகிவிடுகிறது. அவ்வாறு மன்னிக்க முடியாத குற்றத்தை பகிரங்கமாக செய்த மனைவி மனம் வருந்தி திருந்திய பிறகு பெருந்தன்மையோடு ஏற்று கொள்ளும் இப்படத்தின் கணவனின் பாத்திரம் அற்புதமானது. ஏனென்றால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே உள்ள ஆத்மார்த்தமான உறவை தீர்மானிப்பது வெறும் பாலுறவு மட்டும் அல்லவே என்பதை இப்படத்தில் அழகாக சொல்லி இருப்பார் மகேந்திரன்.

நெஞ்சத்தை கிள்ளாதே
மற்றொரு படத்தை உதாரணமாக சொல்ல வேண்டுமானால் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தை கூறலாம். மனசு முழுவதையும் ஆக்கிரமித்து கொண்ட படம் நெஞ்சத்தை கிள்ளாதே. சிற்பத்தை கல்லில்தான் செதுக்க முடியும்என்று யார் சொன்னது? வெள்ளை துணியிலும் செதுக்கலாமே என்றார் மகேந்திரன்! தூரிகையில்லாமல் வண்ணக் கலவைகள் இல்லாமல், காமிரா எனினும் எந்திரத்தை தூரிகையாக்கி, அற்புதமான பல வண்ண ஓவியத்தை படைத்து காட்டியவர் மகேந்திரன். சுருக்கமாக சொன்னால், மனிதனின் துல்லியமான உணர்வைகூட நிராகரிக்காமல் அதையும் வெளிப்படுத்திய படம்தான் நெஞ்சத்தை கிள்ளாதே.

திகட்டும் காமிரா வண்ணம்
இவ்வளவையும் தந்த மகேந்திரன், திடீரென படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டார். மலிந்து மலிந்து போன மசாலாத்தனங்களுக்கு கிடைத்த மவுசுகளை கண்டு ஒதுங்கி இருந்தார் போலும்.. நீண்ட இடைவெளிக்கு பிறகே ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டினார். இன்று நம்மை விட்டு பிரிந்துள்ளார் மகேந்திரன்.. ஆனால் மிகக்குறைவான வசனங்கள், கண்கள் திகட்டி போகிற அளவுக்கு காமிரா வண்ணங்கள், உள்ளத்தை உருக்கும் ராஜாவின் இசை, படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தொழில்நுட்பம் என பல அம்சங்கள் மகேந்திரனை என்றுமே நமக்கு நினைவுபடுத்தும்.

அழியாத இடம்
மனசுக்கு இதமாக.. நெஞ்சுக்குள் நீண்ட நாள் அசைபோடும் அளவிற்கு அற்புதமான படங்களை வழங்கிய அசாத்திய கலைஞன் மகேந்திரனுக்கு திரையுலகில் ஒரு அழியாத இடம் உண்டு!












Click it and Unblock the Notifications