ரெடி ஆகுங்க மாணவர்களே..ஒரு நாள் முன்னதாகவே வரும் +2 பொதுத் தேர்வு முடிவுகள்! அமைச்சர் சொன்ன அப்டேட்!
சென்னை: தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் விடைத்தாள் திருத்தம் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்பாக அதாவது மே 8ஆம் தேதியான நாளை மறுநாள் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மூன்றாம் தேதி முதல் தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றது.
மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்த நிலையில் தற்போது 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

2024- 2025ஆம் கல்வி ஆண்டுக்கான +2 பொதுத் தேர்வினை தமிழ்நாடு முழுவதும் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதியிருந்தனர். கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இந்த ஆண்டு தேர்வு மார்ச் 25ஆம் தேதி முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 80க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில் நடைபெற்றது.
ஏப்ரல் ஒன்றாம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் 15ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் எனவும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் மதிப்பெண் சரிபார்த்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் திட்டமிட்டதற்க்கு ஒருநாள் முன்பாகவே அதாவது மே 9ஆம் தேதிக்கு பதில் மே 8ஆம் தேதியான நாளை மறுநாள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," மார்ச் 2025-ல் நடைபெற்ற 2024- 2025 கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 8/5/2015 வியாழக்கிழமை அன்று அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதளம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆண்களின் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications