கிங் மேக்கரா? அரசியல் ஜோக்கரா? தாக்கத்தை ஏற்படுத்துவாரா தவெக விஜய்? மே 4ல் காத்திருக்கும் ட்விஸ்ட்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026, இதுவரை இல்லாத அளவுக்கு கணிக்க முடியாத தேர்தலாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி தான். பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்குள் நடந்த போட்டி, இந்த முறை மூன்று முனைப் போட்டியாக மாறியுள்ளது. இதனால் தேர்தலுக்கு முன்பு வரை தெம்பாக இருந்த 'சில' கட்சிகள் தற்போது மிகுந்த பரபரப்பில் இருக்கின்றன என்கின்றனர் அரசியர் பார்வையாளர்கள்.
தமிழக அரசியல் என்றாலே திமுக மற்றும் அதிமுக இரண்டு பெரிய கட்சிகளுக்கிடையேயான போட்டியாகவே இதுவரை இருந்தது. ஆனால் இந்த முறை, அந்த பழைய அரசியல் கணக்குகளை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் புதிய சக்தியாக தவெக களமிறங்கியுள்ளது.

இதுவே தற்போது பலரது கணிப்புகளை சிக்கலாக்கியுள்ளது. பொதுவாக தேர்தல்களில் வாக்காளர்களின் மனநிலையை ஆய்வு செய்து முடிவுகளை கணிக்க முடியும். ஆனால் இந்த முறை, "யாருக்கு வாக்களித்தீர்கள்?" என்ற கேள்விக்கு கூட பலர் நேரடியாக பதில் அளிக்காமல் தவிர்க்கும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக தேர்தல்
தமிழக அரசியல் வரலாற்றை பார்த்தால், புதிய கட்சிகள் உருவாகி பெரிய மாற்றத்தை கொண்டு வருவது எளிதான விஷயம் அல்ல. விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக ஒரு கட்டத்தில் முக்கிய சக்தியாக இருந்தது. அதேபோல் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் மெதுவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கமல்ஹாசன் அரசியலுக்குள் வந்தாலும், பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் விஜய் நேரடியாக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, தனது கட்சியை முழு அளவில் களத்தில் இறக்கியுள்ளார்.
விஜய்
இந்த தேர்தலில் விஜய்க்கு கிடைத்திருக்கும் கவனம் சாதாரணமானது அல்ல. குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்கு ஒரு தனி ஆதரவு அலை உருவாகியிருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், திமுக எதிர்ப்பு மனநிலை கொண்ட வாக்குகள், அதிமுக அல்லது மற்ற கட்சிகளுக்கு செல்லாமல் தவெக பக்கம் திரும்பியிருக்கலாம் என்ற மதிப்பீடும் உள்ளது.
அதிமுக
தற்போது வெளியாகியுள்ள பல தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை சராசரியாக எடுத்துப் பார்த்தால், திமுக கூட்டணி சுமார் 120க்கு அருகில் இடங்களைப் பெறும் எனவும், அதிமுக கூட்டணி 60 முதல் 80 இடங்கள் வரை பெறும் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தவெக 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையே அரசியல் கணக்குகளை முற்றிலும் சிக்கலாக்கியுள்ளது.
கிங் மேக்கர்
ஏனெனில், ஒரு கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தால், அதாவது 118 இடங்களை எட்டாமல் இருந்தால், அடுத்த கட்டத்தில் கூட்டணி அரசியல் முக்கியமாக மாறும். அப்போது 20 அல்லது 30 இடங்கள் கொண்ட கட்சி கூட ஆட்சியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக மாறிவிடும். இதுவே "கிங் மேக்கர்" என்ற அரசியல் நிலை. அந்த வகையில், விஜயின் தவெக இந்த தேர்தலில் கிங் மேக்கராக மாறுமா என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.
விஜயின் அரசியல்
ஒருவேளை தொங்கு சட்டமன்றம் உருவானால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில், தவெக ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதனால் விஜயின் அரசியல் முக்கியத்துவம் திடீரென உயரக்கூடும். ஆனால், இதற்கெதிராக ஒரு கருத்தும் உள்ளது. தமிழகத்தில் மக்கள் பொதுவாக தெளிவான தீர்ப்பை வழங்குவார்கள்; தொங்கு சட்டசபை அரிது என்றே பல அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மூன்று முனைப் போட்டி
அதே நேரத்தில், தவெக பெறும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுக வாக்குகளைப் பாதிக்கக்கூடும் என்பதால், அதிமுகக்கு இது சவாலாக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்படுகிறது. முக்கியமாக, இந்த தேர்தலில் மிக அதிக தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம், மூன்று முனைப் போட்டி உருவாகியிருப்பது தான். இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் முடிவுகள் மாறுபடும் சாத்தியம் அதிகரித்துள்ளது. விஜய் இந்த தேர்தலில் நேரடியாக ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றாலும், அவரது வருகை தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications