விஸ்வரூபமெடுக்கும் ஆவின் முறைகேடு.. ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயம்.. தோண்ட, தோண்ட ஊழல்..பகீர்!
சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில் அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி ஏற்பட்டதும் இந்த முறைகேடுகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர் இந்த முறைகேடுகள் குறித்து கடந்த அ.தி.மு.க ஆட்சி மீது நேரடியாக குற்றம்சாட்டினார்.

ஆவின் முறைகேடு
தேனி, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் விதிகளை பின்பற்றாமலும் முறைகேடாகவும் மேலாளர் உள்பட 870 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தீவிரமான விசாரணையை தி.மு.க அரசு கையிலெடுத்துள்ளது. ஆவின் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர்களாக இருந்த ரமேஷ் குமார், வசந்த் குமார், செல்வம் உள்பட 34 முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்து சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தோண்ட, தோண்ட ஊழல்
தற்போது ஆவின் முறைகேடுகளை தோண்ட, தோண்ட பல்வேறு விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஆவினுக்கு விளம்பரம் செலவு செய்ததில் ஒரு தொகையும், கணக்கு காட்டியதில் ஒரு தொகையும் என முரண்பாடாக உள்ளது. ரூ.10.37 கோடி செலவில் ரூ.4.44 கோடிக்கு மட்டுமே ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

ஆவணங்கள் மாயம்
ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயமாகி உள்ளது என்ற பகீர் தகவல் தெரியவந்துள்ளது. அந்த ரூ.5.93 கோடி செலவுக்கான ஆவணங்கள் அழிக்கப்பட்டு இருப்பது அல்லது தொலைக்கப்பட்டு இருப்பது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இந்த முறைகேடுகளில் தொடர்புடைய பால் கூட்டுறவு தணிக்கை துறை இயக்குனர் பிரமிளா, அதிகாரிகள் லோகநாதன், ருஷ்யாராணி, ஜெயபாலன், சந்திரசேகரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் உள்ளது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறி இருந்தார். இவ்வாறு ஆவின் முறைகேடுகள் தொடர்ந்து அம்பலமாகி வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications