சட்டப்பேரவையில் இன்று: சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது இன்று 4வது நாளாக விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து பிரச்சனை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கடந்த 14 ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். இதைத்தொடர்ந்து 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் மார்ச் 15 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை எல்லாம் வெற்று அறிவிப்புகள் மட்டுமே என்றும், தேர்தலை ஒட்டிய பட்ஜெட் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் தமிழக அரசின் புதிய பட்ஜெட்டை விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், மார்ச் 17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறுகிறது. மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை இன்று (மார்ச் 20) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதன் பின்னர், நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும். இதற்கு அரசுத் தரப்பில் பதில்கள் அளிக்கப்படும்.
அதன் தொடர்ச்சியாக, பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதங்கள் நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற உள்ளன.
நெல்லையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதேபோல, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரௌடி, ஈரோடு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா என்பதும் தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
சென்னை தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை காரணமாக அடிக்கடி போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மௌலானா கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார். மேலும், திருத்துறைப்பூண்டி முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications