பாஜக உள்ள வந்துரும்ங்க தோழர்.. சிபிஐக்கு 5 தொகுதியை தள்ளிவிட்ட திமுக! 2021ல் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி உள்ளது திமுக. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஆறு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு தொகுதியை குறைத்து 5 தொகுதிகளாக வழங்கி உள்ளது திமுக தலைமை.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் வேகமெடுத்து வருகின்றன. தேர்தல் ஆணையம் இன்று மாலை தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தியுள்ளது.

2026 தமிழக தேர்தல்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமைந்திருந்த கூட்டணியை விட இந்த முறை திமுக கூட்டணியில் மநீம, தேமுதிக உள்ளிட்ட புதிய அரசியல் கட்சிளும் இணைந்துள்ளது. குறிப்பாக தேமுதிக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் திமுக கூட்டணிக்குள் வந்துள்ளன. இதனால் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு கட்சிக்கும் வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையிலும் சிக்கல் உருவாகியுள்ளது.
திமுக கூட்டணி இழுபறி
இந்த சூழலில், கடந்த தேர்தலை விட இந்த முறை கூட்டணி கட்சிகள் தங்களது கோரிக்கைகளை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக தலைமை கூட்டணி கட்சிகளிடம், "இந்த முறை புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த தேர்தலை விட சில தொகுதிகளை குறைத்து ஏற்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் சில முக்கிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு
அதன்படி இந்திய தேசிய காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதில் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
மேலும் காங்கிரஸ் கட்சி மட்டும் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் இருந்து பெற்றுள்ளது. ஆனால் இன்னும் சில முக்கிய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தேர்தல்களாக திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோரின. இதனால் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே வந்தது இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இன்று தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது.
ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு
அதன்படி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைமை கேட்டதாகவும், அதனால் கூட்டணிக்கு ஒப்புகொண்டதாக கூறி இருக்கிறார் அந்த கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்.
தொகுதி குறைப்பு
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிறிய கட்சிகளுக்கு கூட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை இரண்டாக குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழலில் காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக, கொமதேக, ஐயூஎம்எல் மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications