ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் கூடும் தமிழக சட்டசபை.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை மீண்டும் ஏப்ரல் 6ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமே மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 18ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் பின்னர் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதம் வியாழக்கிழமை உடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபை மீண்டும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மானிய கோரிக்கைகள் அன்றைய தினமே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை கூட்டத்தொடரை எவ்வளவு நாட்கள் நடத்துவது என்பது குறித்தும் எந்தெந்த துறைகளுக்கு எப்போது மானிய கோரிக்கை விவாதம் நடத்தலாம் என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்
அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வரும் 30ஆம் தேதி காலை 11 மணிக்குத் தலைமையில் கூடுகிறது. அன்று நடைபெறும் கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றியும் அன்று முடிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டசபை கூட்டத்தொடர் எங்கு நடைபெறும் என்பது தொடர்பாகப் பேசிய அவர், "முந்தைய திமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றினார்.
இப்போதைய முதலமைச்சர் நாம் கட்டிய கட்டிடம் என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யமாட்டார். எதைச் செய்தாலும் தீர ஆலோசித்துத்தான் சரியான முடிவை எடுப்பார்" என்றார்












Click it and Unblock the Notifications