ஆளுநரைப் பற்றி பேசவிட்டு கேட்டுக்கொண்டே இருப்பதா?.. தீர்மானத்தை ஏற்க மாட்டோம் - நயினார் நாகேந்திரன்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை ஏற்க மாட்டோம் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ஆளுநரைப் பற்றி எம்எல்ஏக்கள் பேசியதை சட்டசபையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியது தமிழக மக்களையும், சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிப்பதாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசிடம் ஆளுநர் விளக்கம் கோரலாம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.
ஆளுநரின் செயல் சட்டவிரோதம், ஜனநாயக விரோதம், மக்கள் விரோதம், மனசாட்சிக்கு விரோதம் ஆகும். மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய அனைத்து வினாக்களுக்கும் முறையாக பதில் அளித்திருக்கிறோம் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும் இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கியிருக்கவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலம் அரசியல் செய்ய நினைக்கின்றனர் என்று பேரவையில் முதல்வர் கடுமையாக சாடினார்.
தனித்தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு சட்டசபையில் எம்எல்ஏக்கள் பேசினர். இதனையடுத்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது அவர், ஆளுநர் பற்றி பேசக்கூடாது எனக் கூறி விட்டு எம்எல்ஏக்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று நயினார் தெரிவித்தார். ஆளுநருடைய நடவடிக்கை குறித்துதான் பேசினார்களே தவிர ஆளுநர் குறித்து உறுப்பினர்கள் பேசவில்லை என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.
அதற்கு பேசிய நயினார் நாகேந்திரன், தீர்மானங்கள் என்பது வேறு. ஆளுநர் கோப்புகளை திருப்பி அனுப்பினார். அதற்கு சட்டசபையில் தனி தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது வேறு. அதை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பது வேறு என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். அதில்தான் உறுப்பினர்கள் பேசினார்கள் என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் குறித்து தனிப்பட்ட முறையில் யாரும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
ஆளுநர் என்பவர் மாறலாம். நாளை நீங்களே ஆளுநர் ஆகலாம் என்று கூறினார். சிறுபிள்ளைத்தனம் என்பது குழந்தைத்தனம்தான் என்றார். குழந்தை என்றால் கள்ளம், வெள்ளை மனசுக்காரர் என்று விளக்கம் அளித்தார் சபாநாயகர். ஆளுநருக்கு எதிராக கூர்மையான போக்கை கடைபிடிக்க வேண்டுமா என்று கூறினார். ஆளுநரைப்பற்றி நிதானமில்லாமல் பேசுவதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
வேந்தர்களை நியமனம் செய்வது ஆளுநருக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று 1998ஆம் இதே சட்டசபையில் கருணாநிதி முதல்வராக இருக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இன்றைய தினம் முதல்வரே வேந்தராக இருக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூறினார்.
துணைவேந்தர் நியமனம் குறித்து சட்டசபையில் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
அப்போதெல்லாம் அரசிடம் பேசித்தான் ஆளுநர்கள் துணைவேந்தர்களை நியமனம் செய்வார்கள் என்று கூறினார். ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், சட்டசபை பொதுக்கூட்ட மேடையாகக் கூடாது என்றார். வேந்தர் பதவி அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என்றும் கூறினார் நயினார் நாகேந்திரன். உயர்கல்வி பற்றி பேசியதற்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார். இந்தநிலையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்எல்ஏக்கள் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்தவதாக கூறி பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ஆளுநரைப் பற்றியும் மத்திய அரசைப்பற்றியும் பேசவிட்டு வேடிக்கை பார்க்கின்றனது. இது வேதனையானது. இப்படி சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறுவதற்கு அவசியம் இல்லை. மக்கள் பிரச்சினை எவ்வளவோ இருக்கிறது. வீட்டு வரியை 100 சதவிகிதம் உயர்த்தி உள்ளனர். மின்சார கட்டணம் அதிகமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. இதை மறைப்பதற்காக ஆளுநருக்கு எதிராக பேசுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications