tamil nadu budget 2025: ஒரு கை பாத்துருவோம்.. லட்டு போல் பிரச்சினைகள்! புயலைக் கிளப்பும் அதிமுக?
சென்னை: 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக அரசின் நான்காவது முழு தமிழக பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். அதே நேரத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு, டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அதிமுக பேரவையில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலில் தேசிய கீதம் பாடவில்லை என ஆளுநர் தனது உரையை புறக்கணித்த நிலையில் சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரை அவை குறிப்பில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு அரசியல் கட்சியினர் பேசிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பதில் உரி இடம் பெற்றது. தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல் நாளான இன்று தமிழகத்தின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். நாளை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு பட்ஜெட் இது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என கூறுகின்றனர் அதிகாரிகள். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விடியல் பேருந்து பயணத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், முதல்வரின் முகவரி, காலை உணவு திட்டம் என பல திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், 24 மாநகராட்சி பகுதிகள், 134 நகராட்சி பகுதிகள், 425 பிற பகுதிகள் என பட்ஜெட் நிகழ்வும் வேளாண் பட்ஜெட் நிகழ்வும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. தொடர்ந்து இன்று மாலை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்படும். தொடர்ந்து 17ஆம் தேதி பட்ஜெட் மீதான முதல் விவாதம் தொடங்குகிறது.
இந்த நிலையில் பேரவையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, டாஸ்மாக்1000 கோடி ஊழல் விவகாரம், அரசு ஊழியர்கள் போராட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி ஆளும் கட்சியை நிலைகுலைய செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்எல்ஏக்களுக்கு உத்தரப்பட்டுள்ளாராம். அதனால் இன்றைய பேரவை நிகழ்வுகள் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications