தமிழக பட்ஜெட் 2025: “இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு” - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. இன்று சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழகம். பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாமல் வழி நடத்துவோம்.
மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு. இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது. இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர்.
நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தொழில்நுட்பத்தின் துணை கொண்டு தீர்வு காணப்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இது. எனவே தேர்தல் பட்ஜெட்டாக, மக்களை கவரும் பட்ஜெட்டாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு போன்ற தகவல்களை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட இருக்கிறார். அதேபோல், 2025-26 ஆம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவர் அளிக்கவுள்ளார்.
ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவுரைகளை நிதி அமைச்சகத்திற்கு வழங்கினார். பட்ஜெட்டில் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதை உணர்த்தும் வகையில் நேற்று வெளியிடப்பட்ட மாநில பட்ஜெட் குறித்த அறிமுக வீடியோவில் "எல்லாருக்கும் எல்லாம்" என்ற வாசகம் இடம்பெற்றது.
இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை பொதுமக்கள் நேரலையில் பார்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் 936 இடங்களில் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் உடனுக்குடன் பட்ஜெட் அறிவிப்புகளை தெரிந்து கொள்ள முடியும். முதல் முறையாக பட்ஜெட்டை ஒட்டி இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை நிதி அமைச்சர் வாசித்து முடித்ததும் அவையின் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் நடத்தப்படும். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை எடுக்க வேண்டும்? என்பது உள்பட அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் வெளியிடுவார்.












Click it and Unblock the Notifications