மொத்தமாக மாறும் கிண்டி.. சென்னை பயணிகளுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் அமைக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நவீன பயணியர் வசதிகளுடன் ரூ.100 கோடி செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடப்பு 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக போக்குவரத்துத் துறைக்கு மட்டும், 12,964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினையும் தங்கம் தென்னரசு அறிவித்தார். தங்கம் தென்னரசு கூறியதாவது:-

கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம்
* பெருகி வரும் நகரமயமாதலில் மிக முக்கியமான தேவையாக பேருந்து, புறநகர் இரயில்வே மற்றும் மெட்ரோ இரயில் போக்குவரத்து போன்ற பல்வேறு வசதிகளை ஒருங்கிணைக்கும் முனையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில் இவற்றை ஒன்றிணைக்கும் பன்முகப் போக்குவரத்து முனையம் ஒன்று, கிண்டியில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயணியருக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.
* இதேபோன்று சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் பன்முகப் போக்குவரத்து முனையம் ஒன்று, நவீன பயணியர் வசதிகளுடன் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
3,000 புதிய பேருந்துகள்
* தமிழ்நாட்டில் கடைக்கோடி குக்கிராமங்களுக்கும் தேவையான தரமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட போக்குவரத்து சேவையினை தொடர்ந்து வழங்கிட இந்த அரசு உரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் நிதியாண்டில் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட 1,031 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டிற்கு உகந்த 750 பேருந்துகளை முற்றிலும் புதுப்பித்து இயக்குவதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1,125 மின் பேருந்துகள்
* பெருநகரங்களில் மாசுபாட்டினை குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னை மாநகரத்திற்கு 950 மின் பேருந்துகள். கோயம்புத்தூர் மாநகரத்திற்கு 75 மின் பேருந்துகள், மதுரை மாநகரத்திற்கு 100 மின் பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகள் உலக வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
ஊக்கத் தொகை
* போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாட்டுத் திறன், சேவை வழங்கல் மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக, போக்குவரத்துக் அடிப்படையிலான கழகங்களுக்கு ஊக்கத் தொகை செயல்பாட்டின் வழங்குவதற்காக, 2,000 கோடி ரூபாய் தொகையுடன் ஊக்க நிதியம் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சேவையினை மேம்படுத்தும் வகையில், சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் செயல்திறன் இடைவெளி நிதியாக 646 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
* இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கான 3,600 கோடி ரூபாய், மாணவர்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்திற்காக 1782 கோடி ரூபாய், டீசல் மானியத்திற்காக 1857 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு 12,964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications