பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534.. தமிழ்நாடு மாணவர்களுக்கு அள்ளிக் கொடுத்த தங்கம் தென்னரசு!
சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதேபோல் உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இது என்பதால், நிச்சயமாக சில சர்ப்ரைஸ்கள் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

அதில் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச வாய்ப்புகளை உருவாக்குதல், அவற்றை அணுக தேவையான கல்வி மற்றும் கலை ஆளுமை திறன் பயிற்சியை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலமாக 4 ஆண்டுகளில் மட்டும் 2,358 மாணவர்கள் 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
17 மாணவர்கள் ஜப்பான், தைவான், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பயின்று வருகின்றனர். இந்த இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் உயர்கல்வியில் ஆர்வம் காட்டும் வகையில் மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது,. புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications