அமெரிக்கா பயணத்திற்கு முன்பாக.. முதல்வர் ஸ்டாலினின் சரவெடி சிக்சர்.. மெகா திட்டங்களுக்கு ஒப்புதல்!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கேபினட் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் கேபினட் கூட்டம் நடைபெற்றதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இந்த கேபினட் கூட்டத்தில் முக்கியமான திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை பார்வையிடச் சென்ற உதயநிதி ஸ்டாலின் இன்னும் தமிழகம் திரும்பவில்லை. எனவே, உதயநிதி ஸ்டாலினை தவிர்த்து மற்ற அமைச்சர்கள் அனைவரும் இந்த கேபினட் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் இன்னும் 2 வாரத்தில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் இந்த கேபினட் கூட்டம் நடத்தப்பட்டதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய கேபினட் கூட்டத்தில் அது பற்றி எந்தவொரு விவாதமும் நடக்கவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள அமெரிக்க பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலீட்டை ஈர்க்கும் வகையில் நடைபெற உள்ள இந்த பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், 44,125 கோடி ரூபாய் மதிப்பிலான 15 புதிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, 15 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாகன உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், பேட்டரி உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள், உணவு பதப்படுத்தல், புதுப்பிக்கதக்க எரிசக்தி பொருட்கள், பேட்டரி உற்பத்தி ஆகிய தொழில்கள் குறித்த முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, தூத்துக்குடியில் செம்காப் நிறுவனம் 21,340 கோடி ரூபாய் முதலீட்டில் 1,114 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், காஞ்சிபுரத்தில் மதர்சன் எலட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.2,600 கோடி முதலீட்டில் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், 1,777 கோடி ரூபாய் முதலீட்டில் 2,025 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், ஈரோட்டில் துவங்க உள்ள மில்கி மிஸ்ட் நிறுவனம் மற்றும் கிருஷ்ணகிரியில் 1,597 கோடி ரூபாய் முதலீட்டில் 715 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைய உள்ள கிரீன் டெட் நிறுவனத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் எரிசக்தி துறையில், தமிழ்நாடு நீர் ஏற்று புனல் மின் திட்டம், தமிழ்நாடு சிறு புனல் மின் திட்டம், தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் புதுபித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பிற்கான கொள்கை ஆகிய மூன்று கொள்கைகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகா வாட் உற்பத்தி நிறுவு திறனை அடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, புனல் மின் திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு உள்ள திட்டம் என்பதால் தனியார் பங்களிப்புடன் செய்வதாக முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications