சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.. தமிழக அமைச்சரவை மாற்றம்? நீக்கப்படும் அமைச்சர்கள் - யாருக்கு சான்ஸ்?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், சிலரது அமைச்சரவை பதவி பறிக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எந்த அடிப்படையில் அமைச்சர்கள் தேர்வு உள்ளது விரிவாக பார்ப்போம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மே 7 ஆம் தேதி முக ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். அதை தொடர்ந்து புது முகங்கள், மூத்தவர்கள் என பலரை கொண்டு அமைச்சரவை அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன.

அவர் தலைமையிலான தமிழ்நாடு அரசு 3 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு நிறைவை ஒட்டியும், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும் அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டு வந்தது.
தமிழ்நாடு அமைச்சரவையை பொறுத்தவரை இதுவரை 2 முறை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. முதன்முதலில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் சிவசங்கர் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அடுத்ததாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறையும், வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலா துறையும் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது 3 வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்படுவதுடன், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும், சிலர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்களின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து நீக்கம் இருக்கலாம் என்று தெரிகிறது.
மே 10 ஆம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் நடக்கலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதால் அங்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 2 அமைச்சர்களும், சில மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் அமைச்சர்களே இல்லை என்ற நிலை நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் அமைச்சர்கள் இல்லாத மாவட்ட எம்.எல்.ஏக்களுக்கே இதில் முன்னுரிமை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.
அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த திமுக எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள், செல்வாக்கு, அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிக்கின்றன. குறிப்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பெற்று அமைச்சரவை மாற்றத்தை செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications