தமிழக பட்ஜெட்டில் வரப்போகும் சரவெடி அறிவிப்புகள்! நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கேபினட் கூட்டத்தில், தமிழக அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம், கடந்த ஜனவரி 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 ஆம் தேதி பதில் அளித்தார். மொத்தம் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (பிப்ரவரி 10 ஆம் தேதி) காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.
முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்வார்கள்.
இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில், தமிழக அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் தரப்படும்.
அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான்.
அதனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில்கள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள தொழில்கள் ஆகியவற்றிற்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. அதனால் நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்றும், அதன் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த கேபினட் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இலவச பேருந்து பயணத் திட்டத்தையும் விரிவுபடுத்துவது பற்றி ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications