இந்திராவுக்கு நடந்தது போல.. நாக்கை அறுத்தால் பரிசு! ராகுலுக்கு மிரட்டல்.. ஆதரவாய் வந்த மு.க.ஸ்டாலின்
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் பரிசு தருவதாக மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்எல்ஏ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் ராகுல் காந்திக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு மாணவர்கள், பத்திரிகையாளர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடினார்.

அப்போது இட ஒதுக்கீடு தொடர்பாகவும் இந்தியா தொடர்பாகவும் ராகுல் காந்தி பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் ராகுல் காந்திக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்தன.
அயல் நாட்டு மண்ணில் இந்திய மண்ணை ராகுல் அவமானப்படுத்தி விட்டதாகவும் பாஜக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் விளக்கம் அளித்தது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து வருபவர்கள் தற்போது ராகுல் காந்தியின் பேச்சை திசை திருப்பி வருவதாக காங்கிரஸ் விளக்கம் அளித்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் எம்எல்ஏவான சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
“ மகாராஷ்டிராவில் மராட்டா, தங்கர் உள்ளிட்ட சமூகத்தினர் தங்களது இட ஒதுக்கீடு உரிமையை போராடி பெற்றனர். ஆனால் காங்கிரசும் ராகுல் காந்தியும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என பேசுகின்றனர். காங்கிரஸ் நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது. இப்படி பேசும் ராகுல் காந்தியின் நாக்கை வெட்டினால் 11 லட்சம் பரிசு தருகிறேன்” என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து காங்கிரஸ் சார்பில் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்த நிலையில் புல்த்தானா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும், டெல்லி பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் ராகுலின் பாட்டிக்கு (இந்திரா காந்தி) ஏற்பட்ட விதிதான் ராகுலுக்கு ஏற்படும்” என்று மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலைதான் ராகுல் காந்திக்கும் ஏற்படும் என பாஜக தலைவர் ஒருவர் மிரட்டியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் பரிசு என ஷிண்டே சிவசேனாவின் எம்எல்ஏ பேசியிருக்கிறார். ராகுல் காந்திக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாகவே இது போன்ற மோசமான மிரட்டல்கள் வெளிவருகின்றன. ராகுல் காந்திக்கு பாதுகாப்பு உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications