பரபரப்பான அரசியல் களம்... முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. சென்னை ஆளுநர் மாளிகை முன்பாக சாலையில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் இந்த பிரச்சனை வெடித்துள்ளது.

ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்றார்கள்; உள்ளே நுழைந்து தாக்க முயன்றார்கள் என்றெல்லாம் ஆளுநர் மாளிகை தரப்பு அறிக்கை விட்டது. அத்துடன் திமுக கூட்டணியினரின் சதிதான் இந்த தாக்குதலுக்கு காரணம் எனவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியது ஆளுநர் மாளிகை. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் இன்று மாலை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 6.30 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், அரசியல் செயல் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தின் முடிவில் புதிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியிடவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
மேலும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஆகியவை தொடர்பாகவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தலைமை செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கோட்டை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, ஜனவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு,
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் வழங்கியதிலும் உள்ள சிலபல குறைபாடுகளை களைதல், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 1 கோடி பெண்களைக் கடந்து கூடுதலாக தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பித்திருப்பதால் அதற்கான கூடுதல் நிதிக்கான ஆதாரங்களை விவாதித்தல், காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் சிறிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குதல், சில புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சில விசயங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், திமுக அமைச்சர்களுக்கு எதிராக, தங்களின் விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு நடத்திவரும் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்களிடம் ஆலோசிக்கிறார் ஸ்டாலின் என்கின்றன.












Click it and Unblock the Notifications