முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்! ஆர்வத்தோடு எதிர்நோக்கும் தொழில்துறை.. இதுவரை ஈர்த்த முதலீடுகள்..!
சென்னை: அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் திரும்பும் நிலையில், இதற்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள், ஈர்த்த முதலீடுகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு தொழில் துறை சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். இன்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா செல்லும் அவர் அங்கு செப்டம்பர் 12ஆம் தேதி வரை அதாவது 17 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 28ஆம் தேதி அன்று அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர் அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
31ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேசும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிறுவனர்கள் தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து செப்டம்பர் இரண்டாம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் தொடர்ந்து பத்து நாட்கள் அதாவது 12ஆம் தேதி அங்கேயே தங்கி இருந்து, பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களை சந்திக்கிறார்.
மேலும் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களாக கருதப்படும் ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள நிறுவன தலைவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார். தொடர்ந்து 7ஆம் தேதி அயலக தமிழர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பை மேற்கொள்கிறார். செப்டம்பர் 12ஆம் தேதி அமெரிக்காவில் அனைத்து நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்வர் தமிழகம் திரும்புகிறார்.
முதலமைச்சரின் இந்த பயணம் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தங்கம் தென்னரசு ஆகியோரும் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்திருக்கிறார்.
அவ்வாறு தமிழகத்திற்கு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.. 2023 மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1342 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை தரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் சுமார் 3440 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். குறிப்பாக ஹபக் லாய்ட் நிறுவனம் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், எடிபாக் நிறுவனம் 540 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இதே போல துபாய் அபுதாபி பயணங்களின் போதும் 2000 கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் மூலம் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இதுவரை 55 சதவீதத்திற்கு மேற்பட்ட முதலீடுகள் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications