கடவுள் உள்ளமே..ஆதரவற்ற குழந்தைகளுக்காக ‘அன்புக் கரங்கள்’..முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை: பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாக்கும் வகையிலும், அவர்களை அரவணைக்கும் வகையில் 18 வயது வரை பள்ளி படிப்பு முடியும் வரை கல்வியை தொடர தமிழக அரசு சார்பில் மாதம் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கும் 'அன்பு கரங்கள்' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அமலில் உள்ளது.
இந்த நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் வகையில் அவர்களது கல்வியை தொடர மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது.

தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்," ஏற்றமிகு தமிழகத்தை உருவாக்க, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களது சீரான வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. மிகவும் வறுமையில் உள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 'தாயுமானவர்' திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் 'அன்புக் கரங்கள்' திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும்.
அது மட்டுமின்றி, பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படும். இதற்கு வழிவகை செய்யும் 'அன்புக் கரங்கள்' திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்க உள்ளார். மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து, பிளஸ் 2 முடித்து,பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் முதல்வர் வழங்க உள்ளார்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications