சூழலைக் காக்கும் ‘மஞ்சப் பை’ - வேகமெடுக்கும் முதல்வர் ஸ்டாலினின் புரட்சி திட்டம்
சென்னை: தமிழ்நாடு அரசின் 'மீண்டும் மஞ்சப் பை' திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. சுற்றுச்சூழலைக் காக்கும் இத்திட்டத்தை பள்ளிகளிலும் விரிவுபடுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாக்கப்படுவதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. அதாவது 30 லட்சத்து 50 ஆயிரம் டன். 'பிளாஸ்டிக் பேராபத்து' குறித்து தமிழ்நாடு அரசின் 'மீண்டும் மஞ்சள் பை' விளம்பரம் மற்றொரு அதிர்ச்சியை முன்வைக்கிறது.
அதாவது, 'நாம் உண்ணும் ஒருவார உணவில் ஏடிஎம் கார்டு அளவுக்கு பிளாஸ்டிக் கலந்திருக்கிறது' என்கிறது. அந்தளவுக்கு நமது வாழ்வில் பிளாஸ்டிக் இரண்டற கலந்துவிட்டது.
உணவகங்களில் ஆர்டர் செய்யும் சாப்பாட்டின் மீது ஈ விழுந்தாலே எகிறிக் குதிக்கும் நாம், கண்ணுக்கே புலப்படாமல் மறைந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் குறித்து கவலை கொள்வதில்லை.
அரசின் பிளாஸ்டிக் அபாயம் குறித்த விளம்பரங்களையெல்லாம், 'ஏதோ சாதாரண விழிப்புணர்வு பிரசாரம்' எனக் கடந்து செல்கிறோம். ஆனால், அது நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை விளக்கிக் காட்டும் எச்சரிக்கை மணி என்பதை உணரத் தவறுகிறோம்.

நாளொன்றுக்கு 15,000 டன் பிளாஸ்டிக்
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள தகவலின்படி, 'இந்திய அளவில் ஒவ்வொரு நாளும் சுமார் 15,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன, அதில் சுமார் 40 சதவீதம் சேகரிக்கப்படாமலேயே உள்ளது' என்கிறது. இத்தகவலை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையத்தளத்தில் பார்க்கலாம்.
பிளாஸ்டிக் பொருள்களில், 'யூஸ் அண்ட் த்ரோ' எனச் சொல்லப்படுபவைதான் பேராபத்தை ஏற்படுத்துகின்றன. இந்தக் கழிவுகள் எளிதில் மக்காது. இவை முதலில் நீர்நிலைகளை அழித்தன. பின்னர் கடலை மாசுபடுத்தியது. அதன்வழியே கடல்வாழ் உயிரினங்களை அழிக்கத் தொடங்கியது. இன்று பூமிப் பந்து முழுக்கவே விளைவை ஏற்படுத்தக்கூடிய நஞ்சாக மாறி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

14 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை:
இதன் அபாயத்தை உணர்ந்து, 2019 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாலித்தீன் கவர்கள் உட்பட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. ஆனால், அந்தத் தடை சில வாரங்கள்தான் தாக்குப்பிடித்தன. ஒன்றைத் தடை செய்யும்போது, அதற்கு மாற்றாக வேறொன்றை முன்வைக்காமல் வெறுமனே தடை எனக் கூறியதால் மீண்டும் கேரிபேக்குகள் சந்தைகளை ஆக்ரமிக்கத் தொடங்கின.
இதனை முழுமையாக ஆராய்ந்து, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக 'மஞ்சப்பை' பிரசாரத்தை தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறது.

20 லட்சம் துணிப் பைகள்:
பிளாஸ்டிக்கின் அபாயத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக விளம்பரங்களில் தோன்றி பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.
''முன்பெல்லாம், சுற்றுச்சூழல் மாசு என்பது மேல்தட்டு மக்களின் பிரச்னையாக இருந்தது. ஆனால் இன்று அடித்தட்டு மக்களின் தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகளும் இதனை முன்வைத்துப் பேசி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே, விளம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார்'' என்கிறார் கிருஷ்ணன் என். சுப்பிரமணியம்.
இவர், 'மஞ்சள் பை' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இதுவரை 20 லட்சம் துணிப் பைகளைச் சந்தையில் விற்பனை செய்திருக்கிறார். அமேசான் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை பார்த்து வந்த இவர், பிளாஸ்டிக் கழிவுகள் ஒழிப்பின் ஓர் அங்கமாக துணிப் பைகளைத் தயாரிக்கும் தொழிலுக்குத் திரும்பியவர்.

பத்து ரூபாய்க்கு மஞ்சள் பை
மதுரையை மையமாக வைத்து, தனியொரு மனிதனாக 2014 ஆம் ஆண்டு முதல் இந்தப் பணியை அவர் முன்னெடுத்து வருகிறார். இவரைப் போன்ற தனிமனித முயற்சிகளுக்குப் பக்கபலமாக அரசும் இந்த வேலையைத் தொடங்கி இருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்காக, 10 ரூபாய்க்குத் தரமான மஞ்சள் பைகளை அரசே தயாரித்து அதற்கென தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
'மஞ்சள் பை என்பதை அவமானமாகக் கருதவேண்டாம். சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளம்தான் இந்த மஞ்சள் பை. அதனால், பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்' என்கிறார் முதலமைச்சர்.
மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில் 'மீண்டும் மஞ்சப் பை' என்ற திட்டத்துக்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியானது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், 'மீண்டும் மஞ்சப் பை' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் 'மஞ்சள் பை புரட்சி' என்ற புதிய அலை வீசத் தொடங்கியது. இதுகுறித்துப் பேசிய சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ், ''கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை நடைமுறையில் இருக்கிறது. அதை ஏன் மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்க முடியாது. இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்" என்கிறார்.

30 குழுக்கள்; 1,700 டன் கழிவுகள்
''அந்தக் காலத்தில் என் தாத்தா, பாட்டி வெளியே போகும்போது மஞ்சப் பையுடன்தான் செல்வார்கள். அந்த வழக்கம் மீண்டும் நடைமுறைக்கு வர வேண்டும். மஞ்சள் பை என்பது மனிதக் குலத்துக்கு ஆரோக்கியமான விஷயம்.
பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்க பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து 30 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த 12 மாதங்களில் மட்டும் 1,700 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன'' என்கிறார் சுப்ரியா சாஹூ.
அரசின் முயற்சி குறித்துப் பேசியுள்ள தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ், ''மஞ்சள் பை இயக்கத்தில் பெண்கள் அதிகளவில் பங்கெடுக்க வேண்டும்'' என்கிறார்.
''அரசின் தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகு சந்தையில் மஞ்சள் பை புழக்கம் அதிகரித்துள்ளதா?'' என கிருஷ்ணன் சுப்பிரமணியத்திடம் கேட்டோம். "உண்மையிலேயே மாற்றம் நடந்துள்ளது. முன்பெல்லாம் துணிப் பையை தயாரிப்பதற்கான கச்சா பொருட்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஏறக்குறைய மஞ்சள் பை என்ற பழக்கமே அழிந்து போய்விட்டது.

'மஞ்சப் பை' - பெயர் எப்படி வந்தது?
2014 ஆம் ஆண்டு நாங்கள் தொழிலைத் தொடங்கியபோது துணிப் பையை தைப்பதற்கான நெசவாலைகள் மிக மிகக் குறைவாக இருந்தன. ஆனால் இப்போது அரசின் முன்னெடுப்புக்குப் பிறகு ஈரோடு, பவானி ஆகிய பகுதிகளில் சில தொழிற்சாலைகள் துணிப் பைகளை தயாரிப்பதற்கான பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. அதை கண்கூடாகப் பார்க்கிறேன்" என்கிறார்.

பள்ளிகளில் மஞ்சப் பை
அது உண்மைதான். மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 'மஞ்சப் பை'யை சந்தைப்படுத்தியுள்ள தமிழ்நாடு, விரைவில் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும் கொடுக்க உள்ளது. பள்ளிக் குழந்தைகளிடம் பிளாஸ்டிக்கின் கொடூரத்தையும் மஞ்சப் பையின் நன்மைகளையும் கூறும்போது, அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதியும். இதனை உணர்ந்து பள்ளிகளில் மஞ்சப் பையை சேர்க்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
பிளாஸ்டிக் எனும் பேராபத்தை ஒழிப்பதற்காக காலம்காலமாக சூழல் ஆர்வலர்கள் போராடி வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் 'மீண்டும் மஞ்சப் பை' திட்டம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
வாருங்கள் மனம் மாறுவோம் - மஞ்சப் பையை வாங்குவோம்!












Click it and Unblock the Notifications