அடிமடியிலேயே "கை" வைக்குதா? இது திமுகவுக்கே மைனஸாகிருமே.. தமிழக காங்கிரஸ் முடிவு என்ன? அசராத கதர்கள்
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கிவரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.. இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் திமுக கூட்டணியிலேயே இந்த முறையும் தொட ர்கிறது தமிழக காங்கிரஸ்.. இந்த முறை அதிக சீட்களை திமுக மேலிடத்திடம் கேட்க போவதாக காங்கிரஸ் கூறிவருகிறது. எப்படியும் 20 சீட்டுக்கு மிகாமல் கேட்போம் என்று சொல்லி வருகிறார்கள்.

சீட் எண்ணிக்கை: ஆனால், திமுக அவ்வளவு எண்ணிக்கையிலான சீட் தருமா? என்பது தெரியவில்லை. கடந்த முறையை போல அல்லாமல், புதுச்சேரியுடன் சேர்த்து 11 இடங்கள் தரப்படலாம் என்கிறார்கள்.
தேசிய அளவில் காங்கிரசுடன் திமுக இணக்கமாக இருந்தாலும், தமிழகத்தின் கோஷ்டி பூசல், வேட்பாளர் உள்ளிட்ட விவரங்களில் அதிருப்தி வைத்திருப்பதாக தெரிகிறது. அதனால்தான், இந்த முறை அதிக சீட்டுக்களை ஒதுக்க திமுக யோசிக்கிறதாம்.
இதுகுறித்து சோஷியல் மீடியாவில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.. சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெரும்பான்மையாக பெற வேண்டுமானால், காங்கிரஸ் கேட்கும் சீட் எண்ணிக்கையை திமுக தந்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் திமுகவுக்குதான் சறுக்கலாகிவிடும் என்கிறார்கள் ஒரு தரப்பினர்..
ஆனால், மற்றொரு தரப்பினரோ, தேசிய கட்சியான, காங்கிரஸ் தனியாக நிற்கட்டுமே.. எந்த கூட்டணியும் இல்லாமல் திமுகவும் தனித்து நின்று ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் எதிர்ப்பில் இருந்து மீண்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து, தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் 28ம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த போவதாக தெரிகிறது. இதற்காக முகுல் வாஸ்னிக், அசோக் கெலாட், பூபேஷ் பாகெல், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு வருகின்ற 28தேதி தமிழகம் வர உள்ளது.
பேச்சுவார்த்தை: இந்த குழுவினருடன் தமிழக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் இணைந்து டி.ஆர் பாலு தலைமையிலான திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகிரி அறிக்கை: இதனிடையே, எம்பி நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அகில இந்திய காங்கிரஸ் அமைத்திருக்கிறது. இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில் உள்ளதாவது:
2024-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அகில இந்திய காங்கிரஸ் அமைத்திருக்கிறது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் நிதி மந்திரியும், மூத்த தலைவருமான ப.சிதம்பரமும், அகில இந்திய தொழில் வல்லுனர்கள் காங்கிரஸ் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கருத்துகளை கேட்கிற ஆலோசனை கூட்டம் 25-ந்தேதி மாலை 3.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கின் கீழ் தளத்தில் எனது முன்னிலையில் நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டம்: மாலை 6 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்போடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களில் பங்கேற்று கருத்துகளை கூறுவதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மகத்தான வெற்றி பெற அடித்தளமாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் அழகிரி.












Click it and Unblock the Notifications