ஆதிக்க சக்திகளின் வெறுப்பு.. சுட்டு கொல்லப்பட்ட தேவசகாயம்.. இறைத்தொண்டை நினைத்து நெகிழும் காங்கிரஸ்
சென்னை: கிறிஸ்துவ இறைத் தொண்டினால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பெரும் புகழ் சேர்த்தவர் புனிதர் தேவசகாயம் பிள்ளை என தமிழக காங்கிரஸ் கமிட்டி போற்றி புகழ்ந்துள்ளது.
இந்தியாவின் தென்கோடியில் இருக்கிற கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், காங்கிரஸ் கட்சி வலிமையுடன் கணிசமான வாக்கு வங்கியை கொண்டிருக்கிறது என்றால் அதற்கு அம்மாவட்டத்தில் பெரும்பான்மையினராக வசிக்கும் கிறிஸ்துவ மக்களே காரணமாகும்.
இந்தச் சூழலில் புனிதர் பட்டம்பெற்ற தேவ சகாயம் பிள்ளையை போற்றி புகழும் வண்ணம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ். அதன் விவரம் வருமாறு;

தேவ சகாயம் பிள்ளை
கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலத்தில் நீலகண்டன் என்ற பெயருடன் 1,712 இல் பிறந்தவர். இவர் பிற்காலத்தில் இயேசு பிரானின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு வடக்கன்குளம் ஆலயத்தில் திருமுழுக்கு பெற்று தேவசகாயமாக மாறி, கிறிஸ்துவ மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சமூக நீதி, சமநிலைத்தன்மை, மதநல்லிணக்கம் ஆகிய கொள்கைகளின் மூலம் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அவர், கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்டார்.

காத்தாடிமலை
அன்றைய ஆதிக்க சக்திகளின் வெறுப்புக்கு ஆளான தேவசகாயம், 1,752 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரல்வாய்மொழி காத்தாடிமலைக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். மக்கள் நலன்சார்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த அவர், அனைத்து சமுதாய மக்களாலும், மனிதப் புனிதராக கருதப்பட்டு, போற்றப்பட்டார்.

புனிதர் பட்டம்
இத்தகைய அர்பணிப்புமிக்க பணியின் காரணமாகத் தான் கடந்த 15.5.2022 அன்று வாடிகனில் நடைபெற்ற விழாவில், தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு தமிழக அரசு அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினரை அனுப்பி பெருமை சேர்த்தது.

புகழ் நிலைக்கும்
தமது சமுதாயப் பணி மற்றும் இறைப் பணி மூலமாக தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு கடந்த 5.6.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் வரலாற்றுச்சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இத்தகைய பெருமைமிக்க இறைப்பணியாளரான தேவசகாயம் பிள்ளை அவர்களை தமிழகம் பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்து வருகிறது. அவரது புகழ் என்றென்றும் நிலைத்திட தமிழ்நாடு காங்கிரஸ் மனதார வாழ்த்துகிறது, போற்றுகிறது.












Click it and Unblock the Notifications