ஜல்லி விலையெல்லாம் ஏறலை.. யாரோ கிளப்பிவிட்டுட்டாங்க! கல்குவாரி உரிமையாளர் வெளியிட்ட அறிக்கை!
சென்னை: தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துவிட்டதாக வெளியான தகவல்கள் கட்டுமானத் துறையினரிடமும், வீடு கட்ட திட்டமிட்டு இருந்த பொதுமக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தகவல்களுக்கு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், பொதுமக்கள் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ஒரு யூனிட் எம்.சாண்ட் 4,000 ரூபாயில் இருந்து 4,500 ரூபாயாகவும், ஜல்லி 3,300 ரூபாயில் இருந்து 3,800 ரூபாயாகவும், பி.சாண்ட் 5,000 ரூபாயில் இருந்து 5,500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டது.
மேலும் டீசல் விலை உயர்வு, குவாரிகளின் எண்ணிக்கை குறைவு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் கட்டுமானப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்ற தகவல்களும் பரவின. இதனால் சிமெண்ட் உள்ளிட்ட பிற கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்து, வீடு கட்டும் செலவு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து கட்டுமானத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. பல இடங்களில் கட்டுமானப் பணிகளை தொடங்க திட்டமிட்டிருந்தவர்கள் கூட விலை நிலவரம் குறித்து விசாரிக்க தொடங்கினர். குறிப்பாக புதிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டிடங்கள் கட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த தகவலால் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் விலைகள் கடுமையாக உயர்ந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்றும், உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தற்போது சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில், கனிமவளப் பொருள்களான Jally, M.Sand மற்றும் P.Sand ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள், கட்டுமானத் துறையினர் மற்றும் வாடிக்கையாளர்கள் யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். .
கீழ்கண்டவாறு அரசு விலை நிர்ணயம் செய்திருந்தது. Jally 5.4,000/-, M.Sand - 5.5,000/-, P.Sand 5.6,000/-, ஆனால் எங்களது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலைக்கும் குறைவாகவே விற்பனை செய்து வருகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, கனிமவளப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக வெளியாகும் ஆதாரமற்ற செய்திகள் மற்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புவதைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.
இதனால் கட்டுமானப் பொருட்களின் விலை தற்போது திடீர் உயர்வு கண்டுவிட்டதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications