4 வருஷத்தில் 24 லாக்-அப் டெத்! அதிர வைக்கும் உண்மைகள்! அரசு இயந்திரம் விழிப்பது எப்போது?
சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 24 காவல் நிலைய மரணங்கள் பதிவாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் சிவகங்கை மாவட்டத்தில் 27 வயதான அஜித் குமார் காவலின்போது உயிரிழந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பேசுபொருளானது. நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இது இந்த ஆட்சியில் நடந்த முதல் சம்பவம் அல்ல. இதுவரை 24 லாக்-அப் டெத் இந்த ஆட்சியில் நடந்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தபோதிலும், அரசு இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க பெரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் சோகத்தின் உச்சம்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது, காவல் நிலைய மரணங்களை திமுக கடுமையாக விமர்சித்தது. "மனித உரிமை மீறல்", "போலீசாரின் வன்முறை" "முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்" என வரிசையாக அழுத்தம் கொடுத்தது. பல்வேறு போராட்டங்களையும் நடத்தியது. சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரின் தாக்குதலால் பலியானபோது, ஆட்சியையே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு பெரும் செய்திகளாக மாற்றியது திமுக. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அரசு இரும்பு கரம் கொண்டு அதை ஒடுக்கியிருக்க வேண்டுமல்லவா. அதுதான் இல்லை. அதைவிட படு மோசமாக மாறிவிட்டதற்கு சிவகங்கையே சமீபத்திய, சாட்சி.

அரியலூர் முருகானந்தம், செங்கல்பட்டு கோகுல், சென்னையில், விக்னேஷ் அப்புராஜா ஆகாஷ், கடலூரில் பாஸ்கர், கரூரில் சங்கர், நாமக்கல் பிரபாகரன், சின்னதுரை மற்றும் விக்னேஸ்வரன் புதுக்கோட்டை, அஜித் குமார் சிவகங்கை, ராமநாதபுரம் பாலகுமார், திருவண்ணாமலையில், தங்கமணி, திருச்சியில் திராவிடமணி, சுலைமான் மற்றும் தாடிவீரன் திருநெல்வேலி சாந்தகுமார் திருவள்ளூர், தங்கசாமி தென்காசி, கார்த்தி மதுரை, அற்புதராஜா மற்றும் ராஜா விழுப்புரம், விக்னேஸ்வரன், ஜெயகுமார், தங்கபாண்டி ஆகியோர் விருதுநகர், மற்றும் தருமபுரியில் செந்தில். இப்படி கடந்த 4 வருடங்களில் நடந்த லாக்-அப் டெத் லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில், காவல்துறை சீர்திருத்தம் குறித்து திமுக முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. போலீசாரின் பொறுப்புடைமை, மனித உரிமை பாதுகாப்பு, விசாரணை முறைகளில் வெளிப்படைத்தன்மை, சிசிடிவி கண்காணிப்பு, தனிப்பட்ட புகார் குழு அமைப்பு போன்றவை அவற்றில் அடங்கும். ஆனால், பெரும்பாலான வாக்குறுதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை எனவும், காவல் நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பான மாற்றங்கள் குறைவாகவே உள்ளன.
மனித உரிமை அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள், காவல் நிலையங்களில் விசாரணை முறைகள், போலீசாரின் வன்முறை, மருத்துவ உதவியின் தாமதம் போன்றவை காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டுகின்றன. காவல்துறை சீர்திருத்தம், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பொறுப்புடைமை ஆகியவை இன்னும் நடைமுறைக்கு வராததால், அரசு மீதான மக்களின் நம்பிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த அவல நிலை எப்போது மாறும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications