இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்!
சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை அறிவிக்கும் நொடியிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வரும். இந்த விதிகள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதாவது Election Commission of India அறிவிக்கும் தேர்தல் அட்டவணையுடன் சேர்த்து இந்த நடத்தை விதிகளும் அமலுக்கு வரும். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனால் இந்த மாநிலங்களில் புதிய அரசை அமைக்க சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. தேர்தல் தேதியை அறிவித்த உடனே, அந்த நொடியிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இந்த விதிகள் தொடரும். இந்த காலகட்டத்தில் அரசியல் கட்சிகளும் அரசும் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலத்தில் எந்தவொரு புதிய திட்டத்தையும் அரசு அறிவிக்க முடியாது. அடிக்கல் நாட்டுதல் விழாக்கள், புதிய சாலைத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படும். இது ஆளுங்கட்சிக்கு தேர்தலில் ஆதாயம் கிடைக்காமல் இருக்க உருவாக்கப்பட்ட விதியாகும்.
தேர்தல் காலத்தில் அரசு அதிகாரிகள் அல்லது பொதுத்துறை ஊழியர்களை தேவையில்லாமல் பணியிட மாற்றம் செய்ய முடியாது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மாற்றங்கள் மேற்கொள்ளக் கூடாது. இதன் மூலம் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஏற்படாமல் தடுப்பதே நோக்கமாகும். அரசு வாகனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு ஹெலிகாப்டர்கள் போன்ற எந்த அரசு வசதிகளையும் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. அரசின் செலவில் சாதனைகளை விளக்கும் விளம்பரங்களையும் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படும்.
மேலும் அரசு கட்டடங்களில் இருக்கும் அரசியல் விளம்பரங்கள், சுவர் விளம்பரங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் புகைப்படங்களைக் கொண்ட விளம்பரங்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும். அவற்றை அகற்றும் செலவையும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே ஏற்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்பத்தை குறிவைத்து விமர்சனம் செய்வது அனுமதிக்கப்படாது.
வாக்குகளைப் பெறுவதற்காக சாதி அல்லது மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுவது தேர்தல் சட்டப்படி கடுமையான குற்றமாக கருதப்படும். அதேபோல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், அச்சுறுத்தல் விடுத்தல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்றவை தேர்தல் சட்டத்தின்கீழ் ஊழல் நடைமுறைகளாகக் கருதப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வேட்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்.
மேலும் வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் பிரசாரம் செய்வதும் தடை. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன் 48 மணி நேரத்திற்குள் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை. அதேபோல் வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றி வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதும் சட்ட விரோதமாகக் கருதப்படும்
தேர்தல் காலத்தில் அதிக அளவு ரொக்கப் பணம் எடுத்துச் செல்லும் போது அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள். பொதுமக்கள் ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் எடுத்துச் சென்றால் அதற்கான உரிய ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த வரம்பு தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டுதலின்படி மாற்றப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சிகளும் அரசும் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற இந்த தேர்தல் நடத்தை விதிகள் முக்கிய பங்காற்றுகின்றன.












Click it and Unblock the Notifications