மிரள வைத்த மின்சார வாரியம்.. கோடிகளில் குவிந்த வசூல்.. தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் இவ்வளவா?
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 2022-23-ம் ஆண்டில் 17,328 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் அபராதமாக ரூ.103 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மின் திருட்டு அதிகமாக நடக்கிறது. முன்பு வீட்டில் உள்ள மின்மீட்டரை ஓடவிடாமல் தகிடுதத்தம் செய்து மின்வாரியத்தை ஏமாற்றுவார்கள். அத்துடன் போஸ்ட் மரத்தில் திருட்டு கரெண்ட் எடுத்து விழாக்களின் போது பயன்படுத்துவார்கள். சர்வ சாதாரணமாக இதெல்லாம் நடக்கும். மின் மீட்டரை ஓடவிடாமல் ஏமாற்றுவதை தடுக்க டிஜிட்டல் மீட்டர்கள் பொறுத்தப்பட்டன. தற்போது தமிழ்நாடு முழுவதுமே டிஜிட்டல் மீட்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சாரத்தை திருடுவது வீடுகளில் தடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வீட்டு மின்சாரத்தை கடைகளுக்கு பயன்படுத்துவது, வணிக நிறுவனங்களுக்கு , வீட்டு மின்சாரத்தை பயன்படுத்துவது இன்னமும் தொடர்கிறது. இதேபோல் கோயில் திருவிழாக்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் அலங்கார விளக்குகள் அமைப்பது, சிறப்பு சந்தைகள் அமைக்கும் போதே, கண்காட்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது அடிக்கடி நடக்கிறது.
இப்படி தமிழகம் முழுவதும் நடைபெறும் மின் திருட்டுகளால் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுவது தொடர்கிறது. இதைத் தடுக்க மின்வாரியம், கண்காணிப்பு டிஜிபி தலைமையில் அமலாக்கப் பிரிவு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இப்பிரிவில் உள்ள அதிகாரிகள் மின்திருட்டு தொடர்பாக அடிக்கடி திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன்படி, 2022-23-ல் 17,328 மின்திருட்டுகளை கண்டுபிடித்ததுடன், மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.103 கோடி வசூலித்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டான 2021-22-ல் 13,145 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.80 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது. அதே போல் 2018-19-ல் 18,453 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.106 கோடி வசூலிக்கப்பட்டு இருந்தது 2021-22ம் ஆண்டை விட 2022-23ம் ஆண்டில் மின் திருட்டு அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு அபராதமும் அதிக அளவில் வசூலிக்கப்பட்டுள்ளது.
மின்சார திருட்டை தடுக்க விழாக்கள் நடைபெறும் பகுதிகள், வாரச் சந்தைகள் நடைபெறும் பகுதிகள், திடீரென நடைபெறும் கட்சி கூட்டங்கள், அலங்கார வளைவுகளில் வைக்கப்படும் மின் விளக்குகள் போன்றவை குறித்து மின்வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அங்கு திடீரென சென்று, மின் திருட்டை கண்டுபிடித்து அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளனர். மின்வாரியம் ஏற்கனவே கடும் நஷ்டத்தில் இயங்கும் நிலையில், மின் திருட்டை தடுத்தால் மட்டுமே கணிசமாக நஷ்டத்தை குறைக்க முடியும் என்பதால் தீவிரமாக இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications