துள்ளி குதிக்கும் தமிழ்நாடு.. குஜராத்தை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய சாதனை! இதுதாங்க சம்பவம்!
சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய துறையில், குஜராத்தை பின்னுக்கு தள்ளி, தமிழ்நாடு மேலும் ஒரு சாதனையை படைத்திருக்கிறது. என்ன சாதனை அது? ஏன் இது முக்கியம் என்பது குறித்து பார்ப்போம்.
2024-ஆம் ஆண்டு வரை இந்திய அளவில் கடல் மீன் உற்பத்தியில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு (2025) தரவுகளின்படி, 6.85 லட்சம் டன் மீன்களைப் பிடித்து தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஏன் இந்த சாதனை முக்கியமானது?
கடல் மீன் உற்பத்தி என்பது சாதாரண மேட்டர் கிடையாது. ஒரு நாட்டின் அந்நியச் செலாவணிக்கு இது ரொம்பவும் முக்கியமானதாகும். இந்தியாவை பொறுத்தவரை ஜிடிபியில் மீன்வளம் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. எனவேதான் கடல் மீன் உற்பத்தி பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குஜராத்தை தமிழ்நாடு வீழ்த்தியிருப்பது மிகப்பெரிய சாதனை. காரணம், குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே மிக நீண்ட கடற்கரையைக் (சுமார் 1,600 கி.மீ) கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் சுமார் 1,076 கி.மீ மட்டுமே. இப்படி இருக்கையில், குறைவான கடற்கரையை கொண்டிருந்தாலும் அதிக அளவில் மீன்களை பிடித்திருப்பது சாதனைதான்.
தேசிய அளவில் பங்களிப்பு
தமிழ்நாட்டின் இந்த சாதனை, தேசிய அளவில் ஒட்டுமொத்த கடல் மீன் உற்பத்தியில் எதிரொலித்திருக்கிறது. அதாவது, முந்தைய ஆண்டுடன் (2024) ஒப்பிடும்போது 2025ல் கடல் மீன் உற்பத்தி 3% அதிகரித்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணம், தமிழக அரசு மீனவர்களுக்கு வழங்கிய நவீன விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான மானியங்கள்தான். மட்டுமல்லாது, மீன்களின் இனப்பெருக்க காலங்களில் மீன்பிடித் தடையை முறையாகப் பின்பற்றியதால், மீன் வளம் கணிசமாக உயர்ந்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்க காலங்களில் மீன்பிடித் தடையை சரியாக கடைபிடிப்பது, மீன் வளத்தை அதிகரிக்க உதவும். இந்த விஷயத்தில் தமிழக மீனவர்கள் சூழலியல் பொறுப்புணர்வுடன் இருந்திருக்கிறார்கள்.
வெற்றிக்கு காரணம்
அதேபோல தமிழகத்தில் உள்ள முக்கிய மீன்பிடித் துறைமுகங்களின் (சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்றவை) நவீனமயமாக்கல் மற்றும் அதிகப்படியான படகுகள் கடலுக்குச் சென்றது உற்பத்தியை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் தளங்கள் மிக நெருக்கமாகவும் நவீனமாகவும் அமைந்துள்ளன. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் குளச்சல் போன்ற இடங்களில் உள்ள பெரிய துறைமுகங்கள், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகளைக் கையாளும் திறன் கொண்டவை. பிடிக்கப்படும் மீன்களை உடனுக்குடன் பதப்படுத்த குளிரூட்டும் நிலையங்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளன இதெல்லாம்தான் இந்த சாதனைக்கு காரணமாகும்.
ஏற்றுமதியில் டாப்
அதேபோல பிடிக்கப்படும் மீன்களில் முதல் ரகம் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பு மிகவும் வலுவானது. ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தேவையான உயர்ரக மீன்கள் தமிழகக் கடற்கரையில் அதிகம் கிடைப்பதும், அதற்கான வணிகச் சூழல் இங்கு சிறப்பாக இருப்பதும் இந்த வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.
பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வரும் நிலையில், தற்போது மீனவளத்துறையிலும் தமிழகம் புதிய உச்சத்தை எட்டியிருப்பது, மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications