அசத்தும் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ்.. நாட்டிலேயே முதன்முறையாக.. தமிழகத்தில் "கிளைமேட் ஸ்டுடியோ"..சபாஷ் அரசு
சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது" என்று பெருமிதம் தெரிவித்திருக்கிறார் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ்.
நம்முடைய சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..
அந்தவகையில், பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. அதாவது, தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவிகிதத் திலிருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, நடைமுறைப்படுத்தப்படுவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் 10 வருடங்களுக்குள் 260 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இதன்மூலம், தமிழ்நாடு எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆக்ஸிஜன்: இந்த கிரீன் தமிழ்நாடு மிஷன் (Green Tamil Nadu Mission) திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகர்புறங்களில் உள்ள வெப்பத்தின் தாக்கம் குறையும்.. பல்லுயிர் பெருக்கம் நிறைய நிகழும்.. ஆக்ஸிஜன் உற்பத்தியும் அதிகரிக்கும்.. காற்றில் உள்ள மாசு கட்டுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. இதற்காகவே, www.greentnmission.com என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டது.
அதுபோலவே, சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, ''தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

மரக்கன்றுகள்: இதுவரை சுமார் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் பதியம் போடப்பட்டு அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.. இந்த திட்டம் தமிழ்நாட்டில் பசுமை போர்வையை அதிகரிப்பதோடு கார்பனை உள்வாங்கவும் பயன்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை ஸ்டுடியோ செயல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டிற்கான தனித்துவமான மாதிரிகளை உருவாக்க 10 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. பேரிடர்களை எதிர்கொள்வதில் உள்ள நிதி சிக்கல், கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சவால்கள் குறித்து, "ஜி - 20" நாடுகளில் பிரதிநிதிகளின் கருத்து பரிமாற்ற கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சுப்ரியா சாஹூ பேசியதாவது:
பசுமை பரப்பு : "சூழலியலை பாதுகாக்க பிரத்யேகமாக, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்பட்டு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது... தமிழகத்தில் இப்போது 23.8 சதவீத பசுமை பரப்பு உள்ளது. இதை, 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன், "பசுமை தமிழ்நாடு இயக்கம்" துவங்கப்பட்டது.

அதன்படி, ஏற்கனவே இருக்கும் காட்டுப்பகுதிகளை பாதுகாத்தல், காட்டுப்பகுதியை அதிகரித்தல், விவசாய நிலங்கள், காலியாக உள்ள பொது இடங்களில் மரங்களை நட்டு வளர்த்தல் போன்ற பணிகள், இந்த திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. சதுப்பு நிலங்களை பாதுகாக்க, தமிழ்நாடு சதுப்பு நில இயக்கமும் துவங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்: நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில், காலநிலை ஸ்டுடியோ துவங்கப்பட்டுள்ளது. பேரிடர் குறித்து முன்கூட்டியே கண்டறியும் ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில், 10 கிராமங்களை தேர்வு செய்து காலநிலை, "ஸ்மார்ட்" கிராமங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது" என்று பெருமிதம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications