விஜய் கிங் மேக்கராகும் 2 காரணங்கள் இதுதான்.. புட்டு புட்டு வைத்த ஆக்சிஸ் மை இந்தியா
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் விஜய் அலை நிலவுவதால் தவெக அட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆதரவால் திமுகவை விஜய் ஓவர்டேக் செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. அந்த கணிப்பின் முழு விபரம் இதோ.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 85 சதவீதம் பேர் தேர்தலில் வாக்களித்திருந்தனர்.

4 முனை போட்டி
தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ராமதாஸ் - சசிகலா தனி கூட்டணி அமைத்தனர். மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு 117 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிக்கு தான் பெரும்பான்மை கிடைக்கும்.
நடிகர் விஜய் தவெக மூலம் அரசியலில் இறங்கிருப்பது தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளின் வாக்குகளையும் விஜய் பிரித்துள்ளதால் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது யாராலும் எளிதில் கணிக்க முடியாத வகையில் உள்ளது. வருகிற மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தவெக 98 -120
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 91 - 110 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக 22 - 32 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
விஜய்யின் தவெக 98 -120 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் தமிழர் உள்ளிட்ட மற்றவர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற மாட்டார்கள் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவீத அடிப்படையில் திமுக, தவெக இரண்டு கட்சிகளும் 35 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக 23 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்றும் ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போலில் கூறப்பட்டுள்ளது.
ஆட்சியமைக்கும் தவெக
தவெக ஆட்சியமைக்கும் என்று சொல்லியுள்ள ஒரே கணிப்பு இதுதான். 18-19 வயதில் உள்ள முதல்முறை வாக்காளர்களில் தவெகவுக்கு 68 சதவீதம் பேர் அதரவாக உள்ளனர். 20-29 வயதில் 59 சதவீதம் பேரும், 30-39 வயதில் 45 சதவீதம் பேரும் தவெகவுக்கு ஆதரவாக உள்ளனர். 40 வயதில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளதாக அந்தக் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
சமுதாய அடிப்படையில் தவெகவுக்கு பட்டியலின மக்கள் ஆதரவு அதிகம் உள்ளதாகவும், திமுகவுக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் சிறுபான்மை வாக்கிலும் தவெகவுக்கு கணிசமான ஆதரவு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு வன்னியர் மற்றும் பிராமணர் சமுதாயங்களில் ஆதரவு உள்ளதாக அந்தக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தவெகவுக்கு 38 சதவீதம்
கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தில் அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டு, திமுக மற்றும் தவெகவுக்கு கணிசமான ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆண்களில் திமுகவுக்கு ஆதரவாக 36 சதவீதம், தவெகவுக்கு 32 சதவீதம், அதிமுகவுக்கு 26 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும், பெண்களிடம் திமுகவுக்கு 34 சதவீதம், தவெகவுக்கு 38 சதவீதம், அதிமுகவுக்கு 20 சதவீதம் ஆதரவு உள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸில் போலில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வேட்பாளர் விருப்பத்தில் விஜய்க்கு ஆதரவாக 37 சதவீத மக்களும், மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக 35 சதவீத மக்களும், எடப்பாடி பழனிசாமிக்கு 22 சதவீத மக்களும் கருத்து கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications