உழவுக்கு உயிர் கொடுப்போம்! தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ரூ. 6 லட்சம் மானியம்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழக அரசின் உழவர் நல சேவை மையம் திட்டம், கிராமப்புற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ. 6 லட்சத்தை மானியமாக வழங்குகிறது. இதை பெற விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். வாழ்வில் வளம் பெறுங்கள்.

கடந்த சில ஆண்டுகளாக எத்தனையோ இளைஞர்கள் படித்திருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது இல்லாத நிலை உள்ளது. நாளுக்கு நாள் டிரெண்ட் மாறிக் கொண்டே இருப்பதால் அவர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு வருவதற்குள் அந்த படிப்பு காலாவதியாகிவிடுகிறது.
வேலை கிடைக்காமல் பலர் கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார்கள். ஒரு அரசு வேலையாக இருந்தாலும் ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிலும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. இதனால் அவர்களும் பல்வேறு கூலி வேலைகளை செய்யும் நிலை உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு 2025- 2026 ஆம் ஆண்டிற்காக முதல்வரின் உழவர் நல சேவை மைய திட்டம் என்ற ஒன்றை தொடங்கியுள்ளது. இது கிராமப்புற இளைஞர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமையும். கரூர் மாவட்டம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையில் படித்த இளைஞர்கள் தங்களுக்கான தனிநபர் தொழிலை எளிதாக தொடங்க முடியும். இந்த மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவை வழங்கப்படும்.
பயிர்களில் நோய் ஏற்படுதல், விளைச்சல் குறைவு, பூச்சிகளின் பாதிப்பு இருந்தால் உயர் தொழில்நுட்பத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். விளைச்சலை உயர்த்துவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
மேலும் வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் முறைகள் பற்றிய பயிற்சிகளும் இங்கு கிடைக்கும். ரூ 10 லட்சம் முதல் ரூ 20 லட்சம் வரை முதலீடு செய்யும் இந்த மையங்களுக்கு அரசு 30 சதவீதம் மானியம் வழங்குகிறது.
இதனால் 300 சதுர அடியில் மையம் அமைத்தால் ரூ 3 லட்சமும், 600 சதுர அடியில் மையம் அமைப்போருக்கு ரூ 6 லட்சமும் மானியமாக கிடைக்கும். இந்த மானியம் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு மிக பெரிய ஊக்கமாக அமையும்.
வேளாண்மை, தோட்டக்கலை வேளாண் பொறியியல் அல்லது வேளாண் தொடர்பான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்தவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.
விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்ய உரிமங்களை பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சார் நிறுவனங்களில் பணியில் இருப்பவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. விருப்பமுள்ளவர்கள் உரிய வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கடன் ஒப்புதல் கிடைத்ததும் agrisnet என்ற இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து மானிய உதவியை பெற விண்ணப்பிக்கலாம். உரிமங்கள் இல்லாதவர்கள் அதே இணையதளத்தில் மூலம் அதற்கான விண்ணப்பித்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.












Click it and Unblock the Notifications