இனி ரூ.1000 அல்ல.. ரூ.1500.. தமிழ்நாடு அரசு அடுக்கிய அசத்தலான அறிவிப்புகள்.. ஒரே கல்லில் பல மாங்காய்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முக்கியமான திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்பான விரிவான விளக்கத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. பல்வேறு நிதி உதவி திட்டங்களை உயர்த்துவது தொடர்பாகவும் தமிழநாடு அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், வருவாய்த் துறை ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறை. இந்தத் துறை ஒரு காலத்தில் நில வரி வசூல் செய்கின்ற பணியை மட்டுமே செய்து வந்தது. இந்தத் துறை தற்போது பொது நிர்வாகத் துறையாக, மக்களின் நலன் காக்கும் துறையாகச் செயல்பட்டு வருகிறது.

பொது மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி, பொது மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல். பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பேரிடரின்போது பொது மக்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்.
நில உரிமையாளர்களுக்குப் பட்டா வழங்குதல், அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தல், அரசு நிலங்களைப் பாதுகாத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிலச் சீர்திருத்தச் சட்டங்களை செயல்படுத்துதல், அரசு நிலத்தைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்குதல், பட்டா மாறுதல் செய்கின்ற நிலத்தின் எல்லைகளை அளந்து காட்டுதல் இதுபோன்ற செயல்களை மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கின்ற பணிகளையும். பொதுத் தேர்தல் நடத்துகின்ற பணிகளையும் வருவாய்த் துறை இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறது.
இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்:
முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு 6 இலட்சத்து 52 ஆயிரத்து 559 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கியுள்ளார்கள்.
முதலமைச்சர் அவர்கள் உருவாக்கிய எங்கிருந்தும் எப்போதும் இணையம் வழி பட்டா மாறுதல் திட்டம்:
பொதுமக்கள் இணைம் வாயிலாக எந்நேரமும் எங்கிருந்தும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பம் செய்வதற்கான சேவையை முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் 23.9.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். இரண்டு ஆண்டுகளில் 41 இலட்சத்து 81 ஆயிரத்து 723 பட்டா மாறுதல்கள் இணையம் வழி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளன.
இணையத்தில் நகரங்களின் புலப்படங்கள்:
மாநிலத்தில் மொத்தம் உள்ள 186 நகரங்களில் 179 நகரங்களுக்கான புலப்படங்கள் கணினி படுத்தப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 7 நகரத்திற்கான புலப்படங்கள் கணினி படுத்தப்பட்டுள்ளன. இணையத்தில் ஏற்றும் பணி நடைபெறுகிறது.
புல எல்லைகளை அளந்திட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதியமுறை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நில உரிமையாளர்கள் தங்களது புல எல்லைகளை அளவை செய்து அத்துகாட்டுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய முறையை 20.11.2023 அன்று தொடங்கி வைத்து நில உரிமையாளர்களின் மனக்குறையைத் தீர்த்துள்ளார்கள்.
கையால் எழுதப்பட்ட பழைய ஆவணங்களை ஒளிபிம்ப நகல் எடுத்து பராமரித்தல் பணி:
முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி கையினால் தயாரிக்கப்பட்ட பழைமையான ஆவணங்களை ஒளி பிம்ப நகலெடுத்துப் பராமரிக்கும் பணி சென்னையில் உள்ள ஆவணக் காப்பகம் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாண்டுகளில் 9,40.725 தாள்கள் ஒளி பிம்ப நகலெடுத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
சான்றிதழ் வழங்குதல்:
முத்தமிழஞர் கலைஞர் அவர்கள்தான் 1999ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றைப் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலே வழங்க ஆணையிட்டார்கள். அந்த வகையிலே இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு 2021. 2022 2023 ஆகிய ஆண்டுகளில் இணையதளம் மூலமாக 26 வகையான சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டு, இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 2 கோடியே 75 இலட்சம் சான்றிதழ்கள் வழங்கி மக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டுள்ளன.
முதியோர் உதவித் தொகை:
முதலமைச்சர் அவர்கள் முதியோர் ஓய்வூதியம் 1,000 ரூபாய் என்பதை 1,200 ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாயிலிருந்து 1.500 ரூபாயாக உயர்த்தியதும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 34 இலட்சத்து 5 ஆயிரம் பேருக்குத்தான் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது. இன்று திராவிட நாயகர் ஆட்சியில் மூன்றாண்டு காலத்தில் 85 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை கூடுதலாக வழங்கப்பட்டு தற்போது மொத்தம் 34 இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகின்றது. மேலும், 80 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை தாராளமாக வழங்கப்படுகிறது.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலே மொத்தம் 4,000 கோடியே 87 இலட்சம் ரூபாய்தான் முதியோர் ஓய்வூதியத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது. திராவிட நாயகர் ஆட்சிக் காலத்தில் 5,337 கோடி ரூபாய், அ.தி.மு.க. ஆட்சியைவிட 1.250 கோடி ரூபாய் அதிகப்படியாக முதலமைச்சர் அவர்களால் ஒதுக்கப்பட்டு
மக்கள் தொடர்பு முகாம்: முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமையன்று ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி ஒவ்வொரு மாதமும் 3-வது புதன்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் காலை 9-00 மணிக்கு தாசில்தாருடன் கிராமத்திற்குச் சென்று அந்தப் பகுதியில் காணப்படும் குறைகளை ஆய்வுசெய்கிறார். மக்களிடம் மனுக்களை பெறுகிறார். மறுநாள் காலை 9-00 மணி வரை அந்தப் பகுதியில் இருந்து, ஆய்வுசெய்கிறார். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் குறைகள் தீர்வு காணப்படுகின்றன.
இலவச வேட்டி, சேலை திட்டம்: கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளில் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள். அத்திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆண்டுதோறும் ஏறத்தாழ 1 கோடியே 52 இலட்சம் ஆண்களுக்கு இலவச வேட்டிகளும், 1 கோடியே 60 இலட்சம் பெண்களுக்கு இலவச சேலைகளும் வழங்கி ஏழை மக்களின் வாழ்த்துகளைப் பெற்று வருகிறார்கள்.
இது போக மாற்றுத் திறனாளி உதவித் தொகை ரூ.1,000 என்பது ரூ.1,500 உயர்த்தி கொடுக்கப்பட்டு உள்ளது. முதியோர் உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.5,337 கோடி. மிக்ஜாம், தூத்துக்குடி புயல் நிவாரணத்திற்கு ரூ.2476.89கோடி. கொடுக்கப்பட்டு உள்ளது., முதலிய பல்வேறு பணிகளை ஆற்றி இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications