தமிழுக்கு தொடர் தொண்டு.. பாடலாசிரியர் பழனி பாரதி உள்பட 6 பேருக்கு தமிழக அரசு விருது.. முழு பட்டியல்
சென்னை: தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொடர்ந்து பணியாற்றி வருவோரை பாராட்டி தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாடலாசிரியர் பழனி பாரதி உள்பட 6 பேருக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி, பண்பாட்டை வளர்க்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு நபர்கள் தங்களது படைப்புகள், ஆய்வுகள் மூலம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

இவர்களை பாராட்டி தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 6 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளை கொண்டு சீரிளமையோட இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழ்தாயின் திருத்தொண்டர்களக்கு தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அறிவித்துது அவர்தம் தமிழ் தொண்டுக்கு பெருமை சேர்த்து வருகிறது.
அவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு 1983ம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவ செல்வங்களுக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இருமுறை நடத்தி தமிழ் தொண்டாற்றி வரும் பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.
பேரறிஞர் அண்ணாவின் முதன்மை தொண்டர் என பாராட்டப்பட்டு வரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான பத்தமடை பரமசிவத்துக்கு 2023ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது வழங்குகிறது.
தேசிய தமிழ் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வம் மபொசியை கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளை தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான உ.பலராமனுக்கு 2023ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.
மேலும் தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு கவிதைகளை படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு 2023ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதினை வழங்குகிறது.
முத்தமிழஞர் கலைஞரின் முத்தரசனாரின் ‛‛கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்'' என்று பாராட்டை பெற்றவரும் தமது 92வது அகவையிலும் தனித்தமிழ் வேட்டை அகலாமல் அருந்தமிழ் பணியாற்றி வரும் எழுச்சி கவிஙர் ம.முத்தரசுக்கு 2023ம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்குகிறது.
பல்வேறு நாடுகளின் ஆவண காப்பகங்களில் தகவல்களை திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும், சேழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் எஸ் ஜெயசீல ஸ்டீபனுக்கு 2023ம் ஆண்டுக்கான தமிழ் தென்றல் திருவிக விருது வழங்குகிறது. தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா கருணாநிதிக்கு 2023ம் ஆண்டுக்கான முத்தமிழ் காவலர் கிஆபெ விசுவநாதன் விருது வழங்கப்படுகிறது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையா ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள்'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications