கலெக்டர்களுக்கு பறந்த ஆர்டர்.. கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: வாரம் ஒரு நாள் வார சுழற்சி முறையில் தூய்மை பணியாளர்களுக்கு விடுமுறை வழங்க, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் பொன்னையா ஐஏஎஸ் கடிதம் அனுப்பி உள்ளார். கூடுதலாக விடுமுறை எடுத்தால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 150 ரூபாய் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் லட்சக்கணக்கனோர் கிராமங்களில் பணியாற்றுகிறார்கள்.இவர்களுக்கு அந்தந்த கிராம ஊராட்சிகள் ஊதியம் வழங்குகின்றன. இவர்களுக்கு வார விடுமுறை குறித்து வழிகாட்டுதல்கள் தற்போது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி சுழற்சி முறையில் வார விடுமுறை இனி தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் பொன்னையா ஐஏஎஸ், அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் அனுப்புள்ள சுற்றறிக்கையில் கூறுகையில், தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் வார விடுமுறை தொடர்பாக கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக கடிதம் அனுப்பப்படுகிறது.
இதன்படி "ஊராட்சிகளில் வீடு தோறும் குப்பைகளை சேகரம் செய்வதற்காக வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (VPRC) அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF) மூலமாக தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பார்வையில் கண்ட கடிதத்தில் தூய்மை காவலர்களுக்கு விடுமுறை மற்றும் விடுப்பு குறித்து கோரிக்கை வரப்பெற்றுள்ளது. இது தொடர்பாக கீழ்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது.
தூய்மை காவலர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒருநாள் விடுப்பு துய்க்கலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுப்பு துய்க்கப்படின் அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.150 பிடித்தம் செய்யப்படவேண்டும்" இவ்வாறு பொன்னையா ஐஏஎஸ் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
