தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்? போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வருகிறதா? பறந்தது லட்டர்
சென்னை: போக்குவரத்து துறை ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இது அரசு ஊழியர்கள் தரப்பில் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்...

ஆனால், கடுமையான நெருக்கடி, அரசின் கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலேயே இருக்கிறது.
அகவிலைப்படி: எப்படியும், 4 சதவீதம் வரைக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. அப்படி 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால், தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 25,500 என்றால், ஊழியர்களுக்கு 10,610 வரைக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றெல்லாம் யூகங்கள் மதிப்பிடப்படுகின்றன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பே, அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. இப்போது, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதேபோல, தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இதுகுறித்து தெரிவித்துள்ளார்..
மோட்டார் வாகனங்கள்: "வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் சான்று, பதிவுச்சான்று, தகுதிச்சான்று பெறுவது தொடர்பான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு பக்கத்து மாநிலங்களை விட குறைவுதான். 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான், குறைவாகத்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் உதிரி பாகங்கள் விலை உயர்த்தப்படாது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார்... தீபாவளி போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் மனு தந்துள்ளார்கள்.. எனவே, விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ்: இதனிடையே, தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கிட வேண்டும் என்று போக்குவரத்து துறைக்கு, போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
அந்த கடிதத்தில், "கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை, 10 சதவீதமாக குறைத்ததுபோல், இந்த ஆண்டு செய்யக்கூடாது, இந்த ஆண்டு முழுமையாக 20 சதவீத போனசை வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, தீபாவளி போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இப்போதே அழைக்க வேண்டும், ஒருநாள் முன்பாகவே முன் பணமாக 10 ஆயிரம் வழங்க வேண்டும்" என்றும் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
மகிழ்ச்சி: இதையடுத்து, அடுத்த சில நாட்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுக்கும் என்று தெரிகிறது. முடிந்தால், இந்த முறை 20 சதவீத போனஸையே வழங்கிடவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். அரசு மேற்கொள்ள போகும் இந்த நடவடிக்கை, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications