மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியுமா.. முடியாதா.. சட்டசபையில் தமிழக அரசு விளக்கம்
சென்னை: மூலப்பத்திரம் இல்லாமல் உங்கள் பத்திரத்தைப் பதிவு செய்து கொள்ளலாமா?. நகல் பத்திரத்தை வைக்க வேண்டும் என்றால், காவல் நிலையத்தில் மூலப்பத்திரம் காணாமல் போய்விட்டது என்று சான்றிதழ் வாங்க வேண்டும். அந்தச் சான்றிதழ்கள் வெவ்வேறு இடங்களில் வாங்குகிறார்கள் என்று தற்போது கொடுப்பதில்லை. கோர்ட்டுக்கு சென்றுதான் உத்தரவு வாங்குகிறார்கள் என்று சட்டசபையில் விவாதத்தின் போது அமைச்சர் மூர்த்தி பேசினார்.
சட்டசபையில் பத்திரப்பதிவு, போக்குவரத்து துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடந்தது. சங்ககிரி தொகுதி எம்எல்ஏவான அதிமுகவைச் சேர்ந்த சுந்தரராஜன் பேசுகையில், "ஆட்சி மாற்றத்திற்கு முன்னால் 1 கோடியே 67 ஆயிரத்து 539 பத்திரங்கள், 41 ஆயிரத்து 863 கோடி ரூபாய் வருவாய் வரப்பெற்றது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னால், 1 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 328 பத்திரங்கள், 72 ஆயிரத்து 4 கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது. உதாரணமாக பார்த்தால், 30 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக இந்த அரசிற்கு வருவாய் வந்துள்ளது.

அமைச்சர் மூர்த்தி இதற்கு பதில் அளித்து பேசுகையில், அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் 88 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இப்போது 4 ஆண்டுகளில் நீங்கள் கூறிய 72 ஆயிரம் கோடி ரூபாய் வந்திருக்கிறது. 74 சதவீதம் வருவாய் வந்திருக்கிறது. இந்த ஆண்டு 98 ஆயிரம் கோடி ரூபாய் வரும். உங்கள் ஆட்சியில் 10 ஆண்டு காலத்தில் வந்த வருமானம், 4 ஆண்டு காலத்தில் வந்திருக்கிறது என்றார்.
எம்எல்ஏ சுந்தரராஜன் அப்போது குறுக்கிட்டு பேசுகையில், "கூடுதலாக உங்களுக்கு வருவாய் வந்திருக்கிறது. அந்த வருவாய் எவ்வாறு வந்தது? அன்னிய செலாவணி ஈட்டினீர்களா, இல்லை மத்திய அரசிடமிருந்து வந்ததா, இல்லை உழைப்பாளிகளினுடைய வரிதான் வந்திருக்கிறது" என்று ஆவேசமாக பேசினார்.
அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து பேசுகையில், "வழிகாட்டி மதிப்பானது கடந்த ஆட்சி காலத்தில் 2012-ம் ஆண்டில் அன்றைக்கு மறுசீரமைக்கப்பட்டு 8-6-2017 வரை நடைமுறையில் இருந்து வந்ததைத்தான் இப்போது உயர்த்தி உள்ளோம். வழிகாட்டி மதிப்பு உயர்வு சில இடங்களிலே வேறுபாடு இருந்தால், அந்த வேறுபாடுகளை களைவதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வாசுகி தலைமையில் ஒரு குழு அமைத்து உள்ளோம்.
ஒப்புதல் பெறாத நிலமாக இருந்தால் அதை எந்தவகையில் பதிய இயலும்? ஒப்புதல் பெறாத நிலத்தை பதிய இயலாது என்கிற நடைமுறை உங்கள் காலத்திலும் இருந்தது. தற்போது எங்கள் காலத்திலும் இருக்கிறது. அதை டி.டி.சி.பி. ஒப்புதல் செய்து, என்ன விலை விதிக்கப்படுகிறதோ, அதற்கேற்பதான் பதிவு செய்யப்படுகிறது" என்றார்.
அப்போது பதில் அளிக்கும் வகையில் பேசிய எம்எல்ஏ சுந்தரராஜன், எங்கள் ஆட்சி காலத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் மாற்றங்கள் இருந்தது. தற்போது அடிக்கடி பணிமாற்றம் செய்வதால், சார் பதிவாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்றார்.
அமைச்சர் மூர்த்தி இதற்கு விளக்கம் அளித்து பேசுகையில், " பணியிட மாற்றம் எதற்காக ஏற்படுகிறதென்று உறுப்பினருக்கு தெரியும். யாரேனும் தவறு செய்திருந்தால், அவர்களின்மேல் நடவடிக்கை எடுப்பதற்காக, துறை அதிகாரிகளோ அல்லது லஞ்ச ஒழிப்பு ஆணையமோ தவறு செய்தவர்களை பிடிக்கும்போது அந்த இடத்திலேயே அவர்களை சஸ்பெண்டு செய்து, அல்லது அவர்களை பணி மாற்றம் செய்வார்கள் என்றார்.
இதையடுத்து வேறு விஷயங்களை பேசிய சுந்தரராஜன் எம்எல்ஏ, தாய் பத்திரம், மூலப்பத்திரங்கள் காணாமல் போகின்ற பட்சத்தில், மூலப்பத்திரம் இல்லையென்றால், நகல் பத்திரத்தை வைத்து பதிவு செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவு கொடுத்திருக்கிறது. நீங்களும் ஐ.ஜி. மூலமாக உத்தரவு கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் மூலப்பத்திரங்கள் இல்லாமல் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினார்.
அமைச்சர் மூர்த்தி இதற்கு பதில் அளிக்கையில், "மூலப்பத்திரம் இல்லாமல் உங்கள் பத்திரத்தைப் பதிவு செய்து கொள்ளலாமா?. நகல் பத்திரத்தை வைக்க வேண்டும் என்றால், காவல் நிலையத்தில் மூலப்பத்திரம் காணாமல் போய்விட்டது என்று சான்றிதழ் வாங்க வேண்டும். அந்தச் சான்றிதழ்கள் வெவ்வேறு இடங்களில் வாங்குகிறார்கள் என்று தற்போது கொடுப்பதில்லை. கோர்ட்டுக்கு சென்றுதான் உத்தரவு வாங்குகிறார்கள். மூலப்பத்திரம் இல்லாமல் சொத்துகளைப் பதிவு செய்தால், அதனுடைய விளைவுகள் என்ன என்பது தெரியும். எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எத்தனை பேர் சொத்தை இழந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? என்று கேட்டார். அதற்கு சுந்தரராஜன், அப்படி ஒன்றும் இல்லை. நம்மிடம் வாங்கக்கூடிய அளவில் ஒன்றும் இல்லை என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications