தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 லட்சம் வரை கிடைக்கும்.. ஜிபிஎஃப் கணக்கில் சத்தமே இல்லாமல் நல்ல மாற்றம்
சென்னை: அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணமாக ஜிபிஎஃப் தொகையில் எடுப்பதற்கான வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் தொகைக்கான அனுமதி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என விதிகள் இருக்கிறது. இது 'பகுதி இறுதித் தொகை என்பதால், இதை மீண்டும் மாதத் தவணையாகக் கட்டத் தேவையில்லை. எனினும் அரசு ஊழியரின் ஜிபிஎஃப் கணக்கில் 50 லட்சத்திற்கு மேல் பணம் இருந்தாலும், 50 லட்சம் வரை தான் எடுக்க முடியும்
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) திட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் செலுத்த வேண்டும். விரும்பினால் கூடுதல் பங்களிப்பும் செலுத்திக் கொள்ள முடியும்.

வட்டி விகிதம் எவ்வளவு
ஏப்ரல் 1, 2003-க்கு முன்னதாக அரசுப் பணியில் சேர்ந்த அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களும் (6 மாத கால பணி முடித்தவர்கள்) இதில் உறுப்பினராக இருப்பது கட்டாயம் என்று இருக்கிறது. ஜிபிஎஃப் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் ஒவ்வொரு காலாண்டிற்கும் அறிவிப்பது வழக்கம். 2025-26 நிதியாண்டில் இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆக இருந்தது.
அட்வான்ஸ்
ஜிபிஎஃப் கணக்குத் தொகையில் இருந்து கல்வி, மருத்துவம், திருமணம், வீடு கட்டுதல் உள்பட பல்வேறு தேவைகளுக்காக குறிப்பிட்ட தொகையை முன்பணமாக (அட்வான்ஸ்) எடுத்துக் கொள்ளலாம். மருத்துவச் செலவு, கல்வி, திருமணம் போன்ற காரணங்களுக்காக தற்காலிக முன்பணம் எடுக்க முடியும். இது வட்டியில்லாக் கடன் ஆகும். 12 முதல் 36 மாதத் தவணைகளில் மீண்டும் செலுத்த வேண்டும். பகுதி இறுதித் தொகை எடுக்க முடியும். இதை மீண்டும் கட்டத் தேவையில்லை. வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் அல்லது உயர்கல்விக்காக எடுக்கலாம். இதற்கு நிபந்தனை உள்ளது. இதன்படி 15 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும் அல்லது ஓய்வு பெற 10 ஆண்டுகள் இருப்பவர்களே பகுதி இறுதித் தொகை எடுக்க முடியும்.
50 லட்சமாக உயர்வு
ஜிபிஎஃப் கணக்குத் தொகையில் இருந்து கல்வி, மருத்துவம், திருமணம், வீடு கட்டுதல் உள்பட பல்வேறு தேவைகளுக்காக ஊழியர்கள் பணம் எடுப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் வீடு கட்ட முன்பணமாக அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான அரசாணையை நிதித்துறை செயலர் த.உதயசந்திரன் வெளியிட்டிருக்கிறார். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எதற்காக வாங்கலாம்
புதிய நிலம் வாங்கி வீடு கட்ட, ஏற்கனவே உள்ள வீட்டை விரிவுபடுத்த அல்லது புதுப்பிக்க, கட்டி முடிக்கப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீட்டை வாங்க, வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனை அடைக்க ஜிபிஎஃப் கணக்குத் தொகையில் முன்பணம் எடுக்கலாம். அதிகபட்சம் 50 லட்சம் வரை எடுக்க முடியும் என்கிற அரசின் அறிவிப்பு பல அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கும் என்கிறார்கள்.
நிபந்தனை என்ன
இந்தத் தொகைக்கான அனுமதி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என விதிகள் இருக்கிறது. இது 'பகுதி இறுதித் தொகை என்பதால், இதை மீண்டும் மாதத் தவணையாகக் கட்டத் தேவையில்லை. எனினும் அரசு ஊழியரின் ஜிபிஎஃப் கணக்கில் 50 லட்சத்திற்கு மேல் பணம் இருந்தாலும், அதிகபட்சமாக ஒரு ஊழியர் இந்த நோக்கத்திற்காக ரூ. 50 லட்சம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications